வேகமாக நிரம்பும் கொரோனா படுக்கைகள்


வேகமாக நிரம்பும் கொரோனா படுக்கைகள்
x
தினத்தந்தி 12 May 2021 7:51 PM IST (Updated: 12 May 2021 7:51 PM IST)
t-max-icont-min-icon

நீலகிரியில் கொரோனா நோயாளிகளுக்கு ஒதுக்கப்பட்ட படுக்கைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. பரிசோதனைக்காக நீண்ட வரிசையில் காத்து நிற்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. அத்துடன் தனியார் பள்ளி சிகிச்சை மையமாக மாற்றப்பட்டு இருக்கிறது.

ஊட்டி

நீலகிரியில் கொரோனா நோயாளிகளுக்கு ஒதுக்கப்பட்ட படுக்கைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. பரிசோதனைக்காக நீண்ட வரிசையில் காத்து நிற்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. அத்துடன் தனியார் பள்ளி சிகிச்சை மையமாக மாற்றப்பட்டு இருக்கிறது. 

நிரம்பும் படுக்கைகள்

நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 11 ஆயிரத்தை கடந்து உள்ளது. கடந்த 2 நாட்களில் கொரோனா பாதிப்பால் 5 பேர் இறந்தனர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 100-க்கும் கீழ் இருந்தது. 

தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 912 ஆக உயர்ந்து உள்ளது. இதனால் ஊட்டி அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள படுக்கைகள் நிரம்பி வருகின்றன. 

இந்த நிலையில் நேற்றைய நிலவரப்படி ஆக்சிஜன் உதவியுடன் கூடிய 100 படுக்கைகளில் கொரோனா நோயாளிகள் 99 பேர் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். ஒரு படுக்கை காலியாக உள்ளது. ஐ.சி.யூ. வார்டில் உள்ள 20 படுக்கைகள் நிரம்பி விட்டன. 

மொத்தம் உள்ள 150 படுக்கைகளில் 149 படுக்கைகள் நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு இருக்கின்றனர். 

கூடுதல் படுக்கை வசதிகள் 

பந்தலூர் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் உதவியுடன் கூடிய 10 படுக்கைகள் நிரம்பி விட்டது. குன்னூர் அரசு மருத்துவமனையில் மொத்தம் 80 படுக்கைகளில் 54 பேர் அனுமதிக்கப்பட்டு, 26 படுக்கைகள் காலியாக உள்ளது.

 கோத்தகிரி அரசு மருத்துவமனையில் 16 படுக்கைகளில் 12 பேர் சிகிச்சையில் உள்ளனர். 4 படுக்கை காலியாக இருக்கிறது. கூடலூர் அரசு மருத்துவமனையில் 52 படுக்கைகளில் 43 பேர் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

 அதேபோல் தனியார் மருத்துவமனைகள் மற்றும் கொரோனா சிகிச்சை மையங்களில் உள்ள படுக்கைகள் நிரம்பி வருகின்றன. கொரோனா படுக்கைகள் நிரம்பி வருவதால் கூடுதலாக படுக்கை வசதிகள் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

தடுப்பூசி 

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மாவட்டம் முழுவதும் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு ஆஸ்பத்திரிகளில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதற்காக டோக்கன் வழங்கப்படுகிறது. ஊட்டி அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை மையம் உள்ளது. 

இங்கு தினமும் இளம் வயதினர் உள்பட பெரியவர்கள் பரிசோதனை செய்வதற்காக வருகின்றனர். படிவத்தில் தங்களது விவரங்களை பூர்த்தி செய்த பின்னர் மாதிரி சேகரித்து பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக அவர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று தடுப்பூசி போட்டுச்சென்றனர்.

தனியார் பள்ளி 

மேலும் ஊட்டி நகராட்சியில் தீட்டுக்கல் பகுதியில் உள்ள தனியார் பள்ளி கொரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டு உள்ளது. அங்கு ஊழியர்கள் முழு பாதுகாப்பு கவச உடை அணிந்து கிருமிநாசினி தெளித்தும், பிளீச்சிங் பவுடர் போட்டும் சுத்தம் செய்தனர். அங்கு 200 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது.  

அங்கு கொரோனா நோயாளிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் உள்ளதா, என்று நகராட்சி ஆணையாளர் சரஸ்வதி நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் நீலகிரியில் கொரோனா பரிசோதனை தினமும் 1,700-ல் இருந்து 2,000 ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளது. இதுவரை 4 லட்சத்து 27 ஆயிரத்து 579 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு் உள்ளது.


Next Story