தூத்துக்குடி மாநகராட்சியில் குப்பைகளை தரம் பிரித்து வழங்க வேண்டும் கமிஷனர் சரண்யா அரி எச்சரிக்கை
தூத்துக்குடி மாநகராட்சியில் குப்பைகளை தரம் பிரித்து வழங்க வேண்டும் என மாநகராட்சி கமிஷனர் சரண்யா அரி எச்சரித்துள்ளார்
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் மக்கும், மக்காத குப்பை என பிரித்து வழங்காவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் சரண்யா அரி தெரிவித்து உள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
குப்பை
தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் அமைந்துள்ள குடியிருப்புகள் மற்றும் வணிக நிறுவனங்களில் சேகரமாகும் குப்பைகள் மாநகராட்சி தூய்மை பணியாளர்களால் பெறப்பட்டு நாள்தோறும் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரிக்கப்பட்டு முறையாக அகற்றப்பட்டு வருகிறது.
திடக்கழிவு மேலாண்மை விதிகளின்படி மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து தர வேண்டியது உபயோகிப்பாளரின் கடமையாகும்.
தரம் பிரித்து...
எனவே பொதுமக்கள் தங்கள் வீடுகளில் உருவாகும் குப்பைகள் மற்றும் கழிவுகளை உரியவாறு மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து மாநகராட்சி தூய்மை பணியாளர்களிடம் தனித்தனியாக ஒப்படைக்க வேண்டும்.
தற்போது கொரோனா நோய் தொற்று வேகமாக பரவி வருவதால் உருவாக்கப்படும் குப்பைகளை முறையாக அகற்ற வேண்டியது அவசியமானதோடு, சுகாதாரம் பேணுவதும் அத்தியாவசியமானதாகும். மேலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் வீடுகளில் இருந்து பிரதி வாரம் செவ்வாய் மற்றும் சனிக்கிழமை மட்டும் குப்பைகளை தனியாக மாநகராட்சி தூய்மை பணியாளர்களால் பெறப்பட்டு வருகிறது.
நடவடிக்கை
எனவே மாநகராட்சி பணியாளர்கள் குப்பைகளை சேகரிக்க இல்லம் தேடி வரும்போது மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து தராமல் மொத்தமாக தரப்படும் குப்பைகள் வாங்கப்படமாட்டாது. மேலும் இது போன்று குப்பைகளை தரம் பிரித்து தராத நபர்கள் மீது திடக்கழிவு மேலாண்மை விதி மற்றும் பொது சுகாதார விதிகளின் கீழ் அபராதம் மற்றும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
Related Tags :
Next Story