கூடலூரில் ரூ.2,000 நிவாரண தொகைக்கான டோக்கன் வாங்க குவிந்த பொதுமக்கள்


கூடலூரில் ரூ.2,000 நிவாரண தொகைக்கான டோக்கன் வாங்க குவிந்த பொதுமக்கள்
x
தினத்தந்தி 12 May 2021 9:44 PM IST (Updated: 12 May 2021 9:44 PM IST)
t-max-icont-min-icon

கூடலூரில் ரூ.2,000 நிவாரண தொகைக்கான டோக்கன் வாங்க பொதுமக்கள் சமூக இடைவெளியின்றி குவிந்தனர்.

கூடலூர்:
கூடலூரில் ரூ.2,000 நிவாரண தொகைக்கான டோக்கன் வாங்க பொதுமக்கள் சமூக இடைவெளியின்றி குவிந்தனர். 
நிவாரண தொகை
தமிழக முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதும் கொரோனா நிவாரண தொகையாக ரூ.4,000 வழங்கப்படும் என்று அறிவித்தார். அதில், முதற்கட்டமாக ரூ.2,000 வழங்க உத்தரவிட்டார்.  
இதற்கிடையே கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மாநிலம் முழுவதும் கடந்த 10-ந்தேதி முதல் வருகிற                 24-ந்தேதி வரை முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கொரோனா நிவாரண தொகையாக ரூ.2,000 வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் தொடங்கி வைத்தார். மேலும் ரேஷன் கடை பணியாளர்கள் மூலம் வீடு, வீடாக சென்று டோக்கன் வழங்கி நிவாரண தொகையை வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். 
அதன்படி, தற்போது ரேஷன் கடை பணியாளர்கள் மூலம் வீடு, வீடாக சென்று நிவாரண தொகைக்கான டோக்கன் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. 
பொதுமக்கள் குவிந்தனர்
இதேபோல் தேனி மாவட்டம் கூடலூரில் உள்ள பொதுமக்களுக்கு ரேஷன் கடை பணியாளர்கள் மூலம் பயனாளிகளின் வீடுகளுக்கு நேரில் சென்று டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது. 
இந்தநிலையில் கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட 18-வது வார்டு பகுதியான ஆசாரிமார் தெருவில் நேற்று ரேஷன் கடை பணியாளர்கள் டோக்கன் வழங்கி கொண்டிருந்தனர். அப்போது அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டோர் டோக்கன் வாங்குவதற்காக ஒரேநேரத்தில் குவிந்தனர். அவர்களில் பலரும் முககவசம் அணியாமல் வந்ததுடன், சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் திரண்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், சமூக இடைவெளியை காற்றில் பறக்கவிட்டுவிட்டு டோக்கன் வாங்குவதற்காக பொதுமக்கள் அலட்சியமாக கூடியதால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்தனர். 

Next Story