வால்பாறையில் சிங்கவால் குரங்கை விரட்டிய நாயால் பரபரப்பு


வால்பாறையில் சிங்கவால் குரங்கை விரட்டிய நாயால் பரபரப்பு
x
தினத்தந்தி 12 May 2021 10:47 PM IST (Updated: 12 May 2021 10:47 PM IST)
t-max-icont-min-icon

வால்பாறையில் சிங்கவால் குரங்கை விரட்டிய நாயால் பரபரப்பு ஏற்பட்டது.

வால்பாறை

வால்பாறை வனப்பகுதியில் சிறுத்தை, யானை, காட்டெருமை, கரடி, குரங்கு உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. மேலும் மேற்கு தொடர்ச்சி மலையில் மட்டுமே வாழக்கூடிய சிங்கவால் குரங்குகள் வால்பாறை வனப்பகுதிக்குள் அதிகளவில் காணப்படுகின்றன. 

இந்த சிங்கவால் குரங்குகள் அழிந்து வரக்கூடிய விலங்குகள் பட்டியலில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த அரியவகை சிங்கவால் குரங்குகளை ஆனைமலை புலிகள் காப்பக வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

வால்பாறை நகரையொட்டிய பகுதிகளில்  சிங்கவால் குரங்குகள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. வீடுகள், கடைகளில் வெளியே வைக்கப்பட்டுள்ள பொருட்களை எடுத்து சென்று விடுகிறது. மேலும் விரட்டவரும் பொதுமக்களையும் அச்சுறுத்தி வருகிறது. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்று வால்பாறை காந்தி சிலை அருகே நகராட்சி நிர்வாகம் சார்பில் கட்டப்பட்டு வரும் கட்டிடத்தின் வளாகத்திற்குள் சிங்கவால் குரங்கு ஒன்று புகுந்தது. தொடர்ந்து அந்த குரங்கு அங்கும், இங்கும் தாவி அட்டகாசம் செய்து வந்தது.

 இதனை கண்ட அங்கிருந்த நாய் சிங்கவால் குரங்கை துரத்தி சென்று சண்டை போட்டது. பின்னர் அங்கேயே சுற்றித்திரிந்த சிங்கவால் குரங்கு சிறிது நேரத்தில் அங்கிருந்து சென்றது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story