வேகமாக பரவும் கொரோனா எதிரொலியால் மளிகை, காய்கறி கடைகளை இன்று முதல் முழுமையாக மூட வர்த்தக சங்கத்தினர் முடிவு


வேகமாக பரவும் கொரோனா எதிரொலியால் மளிகை, காய்கறி கடைகளை இன்று முதல் முழுமையாக மூட வர்த்தக சங்கத்தினர் முடிவு
x
தினத்தந்தி 12 May 2021 11:05 PM IST (Updated: 12 May 2021 11:05 PM IST)
t-max-icont-min-icon

வெள்ளியணை பகுதியில் வேகமாக பரவும் கொரோனா எதிரொலியால் மளிகை, காய்கறி கடைகளை இன்று முதல் முழுமையாக மூட வர்த்தக சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர்.

வெள்ளியணை
முழு ஊரடங்கு
தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்த மாநில அரசு கடந்த 10 ந் தேதியில் இருந்து வரும் 24-ந்தேதி வரை முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. அதன்படி பஸ் போக்குவரத்து நிறுத்தம், பெரிய வணிக நிறுவனங்கள், அழகு நிலையங்கள், சலூன் கடைகள், திரையரங்குகள் என பலவும் மூடப்பட்டுள்ளன. 
இருப்பினும் மளிகை கடைகள், காய்கறி கடைகள் உட்பட பொதுமக்களின் அத்தியாவசிய தேவைக்கான கடைகள் மட்டும் காலை 6 மணியிலிருந்து பகல் 12 மணி வரை திறந்திருக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 
வேகமாக பரவும் கொரோனா 
அந்தவகையில் வெள்ளியணையில் மளிகை கடைகள், காய்கறி கடைகள், டீ கடைகள், விவசாய பணிகளுக்கான கடைகள், உணவகங்கள் என பலவும் நேர கட்டுப்பாடுகளை பின்பற்றி திறக்கப்பட்டு வியாபாரம் நடைபெற்று வந்தது. இந்த கடைகளுக்கு வரும் வெள்ளியணை சுற்றுப்பகுதி பொதுமக்கள் சரிவர சமூக இடைவெளியை பின்பற்றாமலும், முக கவசம் அணியாமலும் இருந்தனர். அவர்களுக்கு ஊராட்சி நிர்வாகம், சுகாதாரத்துறை, காவல்துறை என பலரும் கொரோனா குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தியும், அபராதம் விதித்தும் வந்தனர். 
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக வெள்ளியணை மற்றும் சுற்றுப்பகுதி ஊர்களில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கி தற்போது 30-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக வெள்ளியணை பகவதி அம்மன் கோவில் தெருவில் மட்டும் 5 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், அந்த தெரு இப்பொழுது சுகாதார துறையினரால் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு அவர்களின் கண்காணிப்பில் இருந்து வருகிறது. 
கடைகளை மூட முடிவு
இதனால் அச்சமடைந்துள்ள வெள்ளியணை வர்த்தக சங்கத்தினர் மற்றும் ஊராட்சி நிர்வாகத்தினர் மக்களின் நடமாட்டத்தை முழுவதுமாக குறைத்து வெள்ளியணை பகுதியில் கொரோனா மேலும் பரவாமல் தடுக்கும் விதமாக நடவடிக்கை மேற்கொள்ள முடிவு செய்து, இன்று (வியாழக்கிழமை) முதல் வரும் 23-ந்தேதி வரை மெடிக்கல், பால் வினியோகம் தவிர்த்து மளிகை, காய்கறி கடைகள் உட்பட அனைத்து கடைகளையும் முழுமையாக மூட முடிவு செய்துள்ளனர். 
எனவே வெள்ளியணை மற்றும் சுற்றுப்பகுதி பொதுமக்கள் யாரும் பொருள்கள் வாங்க கடைவீதிக்கு வரவே, தேவையின்றி வெளியில் சுற்றவோ வேண்டாம் என வார்த்தக சங்கத்தினரும், ஊராட்சி நிர்வாகத்தினரும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Next Story