பஸ் நிலையங்களில் காய்கறி சந்தைகள் அமைப்பு


பஸ் நிலையங்களில் காய்கறி சந்தைகள் அமைப்பு
x
தினத்தந்தி 12 May 2021 11:09 PM IST (Updated: 12 May 2021 11:09 PM IST)
t-max-icont-min-icon

சிவகங்கை, காரைக்குடி, திருப்பத்தூர் பஸ் நிலையங்களில் தற்காலிக காய்கறி சந்தை அமைக்கப்பட்டுள்ளது

காரைக்குடி
.தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் தற்போது முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி காய்கறி, மளிகை உள்ளிட்ட கடைகள் மதியம் 12 மணி வரை மட்டும் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒரே இடத்தில் காய்கறி சந்தைகள் உள்ளதால் அங்கு பெருமளவு மக்கள் கூட்டம் கூடி பொருட்களை வாங்கி செல்வதால் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளது. 
இதையடுத்து தற்காலிக சந்தை அமைக்க அந்தந்த நகராட்சி, பேரூராட்சி அதிகாரிகள் முடிவு செய்து தற்போது சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, காரைக்குடி, திருப்பத்தூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தற்காலிக சந்தை அமைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே முழு ஊரடங்கு காரணமாக பஸ்கள் இயக்கப்படாததால் அந்தந்த பஸ் நிலையங்களில் தற்காலிக சந்தை அமைக்க முடிவு செய்யப்பட்டு சந்தை அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி காரைக்குடி செக்காலை சாலையில் செயல்பட்டு வந்த தினசரி அண்ணா மார்க்கெட் அங்கிருந்து மாற்றப்பட்டு காரைக்குடி புதிய பஸ் நிலையத்தில் உள்ள மதுரை பஸ் நிறுத்தம் இடம் மற்றும் ராமநாதபுரம் பஸ் நிறுத்தம் இடம் ஆகிய இடங்களில் நேற்று முதல் தற்காலிக சந்தை அமைக்க நகராட்சித்துறை அதிகாரிகள் ஏற்பாடு செய்தனர்.
அதன்படி அங்கு 47 தற்காலிக காய்கறி கடைகள் அமைக்கப்பட்டது. முன்னதாக சிறு வியாபாரிகளுக்கு அங்கு கடை அமைப்பதற்காக இடம் இல்லாததால் அவர்கள் அங்கு மற்ற வியாபாரிகளுடன் வாக்குவாத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்து தேவர் சிலை அருகே தற்காலிக கடை போட அறிவுறுத்தினர். பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதேபோல் சிவகங்கை நேரு பஜாரில் நடைபெற்று வந்த தினசரி சந்தை நேற்று முதல் சிவகங்கை பஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு மொத்தம் 50 கடைகள் வரை போடப்பட்டு நேற்று வியாபாரிகள் வியாபாரம் செய்தனர். 
திருப்பத்தூர் பஸ் நிலையத்தில் தற்காலிக கடைகளாக சுமார் 20 கடைகள் வரை போடப்பட்டு விற்பனை செய்ய பேரூராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். மேலும் காலை 6 மணி முதல் தொடங்கி மதியம் 12 மணிக்குள் வியாபாரம் நடத்த வேண்டும் எனவும், 12 மணிக்கு மேல் கடைகளில் வைத்து வியாபாரம் செய்தால் அபராதம் விதிக்கப்படும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் போலீசார் மைக் மூலம் எச்சரித்தனர்.

Next Story