தர்மபுரி மாவட்டத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை அதிகாரிகள் ஆலோசனைக்கூட்டத்தில் கலெக்டர் கார்த்திகா தகவல்


தர்மபுரி மாவட்டத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை அதிகாரிகள் ஆலோசனைக்கூட்டத்தில் கலெக்டர் கார்த்திகா தகவல்
x
தினத்தந்தி 12 May 2021 11:19 PM IST (Updated: 12 May 2021 11:19 PM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா சிகிச்சைக்கான ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை என்று அதிகாரிகள் ஆலோசனைக்கூட்டத்தில் கலெக்டர் கார்த்திகா தெரிவித்தார்.

தர்மபுரி:
தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா சிகிச்சைக்கான ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை என்று அதிகாரிகள் ஆலோசனைக்கூட்டத்தில் கலெக்டர் கார்த்திகா தெரிவித்தார்.
100 ஆக்சிஜன் படுக்கை வசதி
தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் ஆலோசனைக்கூட்டம் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் கார்த்திகா தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, உதவி கலெக்டர் பிரதாப், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த கூட்டத்தில் கலெக்டர் கார்த்திகா பேசியதாவது:-
தர்மபுரி மாவட்டத்தில் இதுவரை 12 ஆயிரத்து 87 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 10 ஆயிரத்து 350 பேர் முழுமையாக குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். 
தற்போது 1,600-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா சிகிச்சையளிக்க தற்போது 474 ஆக்சிஜன் படுக்கை வசதிகள் உள்ளன. கூடுதலாக 100 ஆக்சிஜன் படுக்கை வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தட்டுப்பாடு இல்லை
இதேபோல் தற்போது 1,291 சாதாரண படுக்கை வசதிகள் உள்ள நிலையில் கூடுதலாக 600 படுக்கை வசதிகள் கொண்ட கொரோனா பராமரிப்பு மையம் செட்டிகரை அரசு பொறியியல் கல்லூரியில் இன்று (வியாழக்கிழமை) முதல் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளது. தமிழக அரசின் மூலம் தேவையான அளவு திரவ ஆக்சிஜன் பெறப்பட்டு நோய்தொற்று தீவிரமாக உள்ளவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
தர்மபுரி மாவட்டத்தில் தற்போது ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆக்சிஜன் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் புதிதாக 40 ஆக்சிஜன் செறிவூட்டிகள் விரைவில் வாங்கப்பட்டு அரூர், பாலக்கோடு அரசு மருத்துவமனைகள் மற்றும் செட்டிகரை பொறியியல் கல்லூரியில் செயல்படும் பராமரிப்பு மையம் ஆகியவற்றிற்கு வழங்கப்பட உள்ளன.
போதுமான கையிருப்பு
இதேபோல் தமிழக முதல்- அமைச்சர் உத்தரவுபடி கொரோனா தொற்று பாதிப்பு உள்ளவர்கள் பயன்பெறும் வகையில் சித்தா மருந்துகள், யோகா, சித்தா, வர்மம், நீராவி குளியல் ஆகியவற்றை உள்ளடக்கிய சித்த மருத்துவ கொரோனா சிகிச்சை மையம் செட்டிகரை கொரோனா பராமரிப்பு மையத்தில் இன்று (வியாழக்கிழமை) முதல் தொடங்கப்படுகிறது. தர்மபுரி மாவட்டத்தில் தற்போது கொரோனா சிகிச்சைக்கான படுக்கை வசதிகள், ரெம்டிசிவர் மருந்து உள்ளிட்ட அனைத்து உயிர்காக்கும் மருந்துகளும் போதுமான அளவில் கையிருப்பில் உள்ளன. 
தற்போது ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் பொதுமக்கள் அவசிய தேவைகள் இன்றி வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும். கொரோனா குறித்த தேவையற்ற வதந்திகளை தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு கலெக்டர் கார்த்திகா பேசினார்.
இந்த கூட்டத்தில் தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் அமுதவள்ளி, மருத்துவ அதிகாரி இளங்கோவன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) நாராயணன், சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் ஜெமினி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ராமதாஸ், அரூர் உதவி கலெக்டர் முத்தையன், ஊராட்சிகள் உதவி இயக்குனர் சீனிவாசசேகர், அனைத்து தாசில்தார்கள் அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வட்டார மருத்துவ அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story