நாமக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் கொரோனாவுக்கு பெண் உள்பட 6 பேர் சாவு- பலி எண்ணிக்கை 145 ஆக உயர்வு
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த பெண் உள்பட 6 பேர் பலியாகி உள்ளனர். இதனால் இதுவரை கொரோனாவுக்கு பலியான நபர்களின் எண்ணிக்கை 145 ஆக உயர்ந்து உள்ளது.
நாமக்கல்,
நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. அதேபோல் உயிர்பலியும் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர். நேற்று முன்தினம் வரை நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 139 பேர் பலியாகி இருந்தனர்.
இந்த நிலையில் குமாரபாளையத்தை சேர்ந்த 45 வயது பெண் கடந்த சில நாட்களாக காய்ச்சல், சளி மற்றும் மூச்சுத்திணறலால் அவதிப்பட்டு வந்தார். அவருக்கு பரிசோதனை செய்தபோது கொரோனா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து குமாரபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இதேபோல் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த எருமப்பட்டியை சேர்ந்த 43 வயது நபர் திருச்சியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியிலும், வானக்காரன்புதூரை சேர்ந்த 45 வயது நபர் மற்றும் திருச்செங்கோட்டை சேர்ந்த 40 வயது நபர் ஆகிய இருவரும் நாமக்கல்லில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியிலும் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டனர். நாமக்கல் நல்லிபாளையத்தை சேர்ந்த 58 வயது நபர் கரூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியிலும், குமாரபாளையத்தை சேர்ந்த 65 வயது முதியவர் நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியிலும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தனர்.
நாமக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் கொரோனாவுக்கு பெண் உள்பட 6 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் இதுவரை நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியான நபர்களின் எண்ணிக்கை 145 ஆக உயர்ந்து உள்ளது.
Related Tags :
Next Story