கொரோனாவுக்கு பலியான மூதாட்டியின் உடலுக்கு இறுதி சடங்கு நடத்திய தாசில்தார்
துமகூரு அருகே கொரோனாவுக்கு பலியான மூதாட்டியின் உடலுக்கு இறுதி சடங்கு நடத்திய தாசில்தார்
பெங்களூரு:
துமகூரு மாவட்டம் குப்பூரு கிராமத்தை சேர்ந்தவர் ஜெயம்மா (வயது 64). இவரது மகன் பக்கத்து கிராமத்தில் வசிக்கிறார். இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜெயம்மாவுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து, மாவட்ட அரசு ஆஸ்பத்திரியில் ஜெயம்மா அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து, வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் காலையில் ஜெயம்மா உயிர் இழந்து விட்டார். கொரோனா பாதிப்புக்கு உள்ளான அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதால், அவர் உயிர் இழந்திருந்தார். இதுபற்றி பக்கத்து கிராமத்தில் வசிக்கும் அவரது மகனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் தாய், கொரோனாவுக்கு பலியாகி இருந்ததால் தனக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு விடும் என்று பயந்து, அவர் வரவில்லை. இதனால் ஜெயம்மாவின் உடல் இறுதி சடங்கு செய்யப்படாமல் வீட்டிலேயே வைக்கப்பட்டு இருந்தது.
இதுபற்றி தாசில்தார் மோகன்குமாரின் கவனத்திற்கு கிராம மக்கள் கொண்டு சென்றனர். உடனே அவர், ஜெயம்மாவின் மகனை அழைத்தும் வருவதற்கு மறுத்து விட்டார்.
இதன் காரணமாக தாசில்தார் மோகன்குமார் கொரோனா தடுப்பு உடைகளை அணிந்து கொண்டு ஜெயம்மாவுக்கு இறுதி சடங்கு நடத்தினார். அவருக்கு அரசு அதிகாரிகளான சிவண்ணா மற்றும் தேவராஜ் உதவி செய்தார்கள்.
பின்னர் துமகூருவில் உள்ள மின் மயானத்தில் ஜெயம்மாவின் உடல் தகனம் செய்யப்பட்டது. மூதாட்டிக்கு இறுதி சடங்கு நடத்திய தாசில்தாருக்கு, துமகூரு மாவட்ட கலெக்டர் உள்பட உயா் அதிகாரிகள் பாராட்டி உள்ளனர். அதே நேரத்தில் தொற்றுக்கு பயந்து தாய்க்கு இறுதிச்சடங்கு நடத்த மகன் வராமல் இருந்தது வேதனைைய ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story