பூட்டிய வீட்டுக்குள் தாய்-மகன் பிணமாக கிடந்ததால் பரபரப்பு
பெங்களூருவில் பூட்டிய வீட்டுக்குள் தாய், மகன் பிணமாக கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்கள் தற்கொலை செய்து கொண்டார்களா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெங்களூரு:
தாய், மகன் உடல்கள் மீட்பு
பெங்களூரு ஆர்.ஆர்.நகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பெமல் லே-அவுட், 1-வது கிராசில் வசித்து வந்தவர் ஹரீஷ் (வயது 30). இவருடன் தாய் ஆர்யம்பா மற்றும் சகோதரி ஸ்ரீலட்சுமி ஆகியோரும் வசித்து வந்தனர்.
இவர்களது வீட்டில் பிரவீன் என்பவர் வாடகைக்கு வசித்து வருகிறார். நேற்று மதியம் ஹரீஷ் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. கதவை திறக்கும்படி கூறியும் ஹரீஷ், அவரது குடும்பத்தினர் கதவை திறக்கவில்லை.
இதனால் சந்தேகம் அடைந்த பிரவீன், உடனடியாக ஆர்.ஆர்.நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். விரைந்து வந்த போலீசார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றபோது ஹரீஷ் ஒரு அறையிலும் மற்றொரு அறையில் ஆர்யம்பாவும் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தனர். மேலும் ஸ்ரீலட்சுமி சுய நினைவின்றி இருந்தார். உடனடியாக அவரை போலீசார் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தற்கொலை?
பின்னர் ஹரீஷ், ஆர்யம்பாவின் உடல்களை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினர். 2 பேரின் உடல்களும் அழுகிய நிலையில் இருந்ததால், இருவரும் எப்படி? உயிர் இழந்தார்கள் என்பது தெரியவில்லை. அதே நேரத்தில் ஸ்ரீலட்சுமி மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததும், அதற்காக சிகிச்சை பெற்று வந்ததாகவும் அக்கம் பக்கத்தினர் தெரிவித்தனர்.
இதனால் தாயும், மகனும் தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு தான், தாய், மகன் சாவுக்கான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து ஆர்.ஆர்.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story