கொரோனாவுக்கு பள்ளி ஆசிரியை சாவு
10 நாட்களில் திருமணம் நடைபெற இருந்த நிலையில் கொரோனாவுக்கு பள்ளி ஆசிரியை பலியான பரிதாபம் நடந்துள்ளது.
பெங்களூரு:
ஆசிரியைக்கு திருமணம்
விஜயாப்புரா மாவட்டம் முத்தேபிகால் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ருதி (வயது 24). இவர், முத்தேபிகாலில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.
ஸ்ருதிக்கு திருமணம் செய்து வைக்க, அவரது பெற்றோர் முடிவு செய்திருந்தனர். அதன்படி, தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் வாலிபருக்கும், ஸ்ருதிக்கும் 2 பேரின் பெற்றோரும் திருமணம் பேசி முடிவு செய்தார்கள். ஸ்ருதிக்கும், அந்த வாலிபருக்கும் எளிமையான முறையில் திருமண நிச்சயதார்த்தமும் நடந்திருந்தது.
மேலும் வருகிற 23-ந் தேதி ஸ்ருதிக்கும், அந்த வாலிபருக்கும் திருமணம் நடைபெற இருந்தது. இதற்கான ஏற்பாடுகளை 2 பேரின் வீட்டிலும் செய்து வந்து கொண்டிருந்தனர். அத்துடன் திருமணத்திற்கு தேவையான பட்டு சேலைகள், நகைகள் உள்ளிட்டவற்றயைும் ஸ்ருதி வாங்கி வைத்திருந்தார். இதற்கிடையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு பாகல்கோட்டை மாவட்டத்தில் வசிக்கும் உறவினர் வீட்டுக்கு ஸ்ருதியும், அவரது தந்தையும் சென்றிருந்தனர்.
கொரோனாவுக்கு பலி
அங்கு ஸ்ருதிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதற்காக அரசு ஆஸ்பத்திரியில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதற்காக அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு ஸ்ருதிக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. உடனடியாக அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஆனாலும் சிகிச்சை பலனின்றி ஸ்ருதி பரிதாபமாக இறந்து விட்டார். வருகிற 23-ந் தேதி இல்லற வாழ்க்கையில் இணையும் ஆசையில் நகைகள், புடவைகள் வாங்கி வைத்திருந்த நிலையில் கொரோனாவுக்கு ஸ்ருதி பலியான சம்பவம் முத்தேபிகாலில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கொரோனாவுக்கு ஸ்ருதி உயிர் இழந்ததால், அவரது உடல் சொந்த ஊருக்கு கூட எடுத்து செல்லப்படாமல் பாகல்கோட்டையிலேயே தகனம் செய்யப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story