2 நாட்களாக சுற்றித்திரிந்த மூதாட்டி மீட்பு


2 நாட்களாக சுற்றித்திரிந்த மூதாட்டி மீட்பு
x
தினத்தந்தி 13 May 2021 1:48 AM IST (Updated: 13 May 2021 1:48 AM IST)
t-max-icont-min-icon

2 நாட்களாக சுற்றித்திரிந்து மூதாட்டி மீட்கப்பட்டார்

தா.பழூர்
அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள மதனத்தூர் கிராமத்தில் 65 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் கடந்த 2 நாட்களாக சுற்றித் திரிந்துள்ளார். இதனை பார்த்த கிராமமக்கள் அவரிடம் விசாரித்தபோது தஞ்சை மாவட்டம் கீழக் கபிஸ்தலம் என்று மட்டும் கூறியுள்ளார். மற்ற விவரங்கள் எதுவும் சொல்லத் தெரியவில்லை. இதுகுறித்து தா.பழூர் போலீசாருக்கு கிராம மக்கள் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், தா.பழூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன், சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், ஏட்டு நிக்கோலஸ் ஆகியோர் மதனத்தூருக்கு சென்று மூதாட்டியிடம் விசாரணை நடத்தினர். அப்போது அந்த மூதாட்டி கிராம மக்களிடம் தெரிவித்த அதே தகவலையே போலீசாரிடமும் ெதரிவித்தார். இதுகுறித்து தஞ்சை மாவட்ட தனிப்பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தஞ்சை மாவட்டத்தில் 65 வயது மதிக்கத்தக்க மூதாட்டி யாராவது காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்டுள்ளதா? என்று தா.பழூர் போலீசார் கேட்டுக் கொண்டனர். அதன்பேரில், தஞ்சை போலீசார் விசாரணை நடத்தியதில் கீழக் கபிஸ்தலம் அம்மன் கோவில் தெருவை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட வேலம்மாள் (65) என்பவரை கடந்த 2 நாட்களாக காணவில்லை என்றும், இதுதொடர்பாக கபிஸ்தலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தரிவித்தனர். அதன்பேரில் வேலம்மாளின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் மதனத்தூருக்கு வேலம்மாளின் சகோதரி மகன் ராஜ்குமார் வந்து மூதாட்டி தனது சித்திதான் என்று உறுதிப்படுத்தினார். பின்னர் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் மூதாட்டி வேலம்மாளை அவரிடம் ஒப்படைத்தார்.


Next Story