ஆக்சிஜன் வசதியுடன் படுக்கை வசதி உள்ளதா? ஆஸ்பத்திரிகளை தேடும் கொரோனா பாதிப்பாளர்கள்


ஆக்சிஜன் வசதியுடன் படுக்கை வசதி உள்ளதா? ஆஸ்பத்திரிகளை தேடும் கொரோனா பாதிப்பாளர்கள்
x
தினத்தந்தி 13 May 2021 2:29 AM IST (Updated: 13 May 2021 2:29 AM IST)
t-max-icont-min-icon

ஆக்சிஜன் வசதியுடன் படுக்கை வசதி உள்ளதா? என்று கொரோனா பாதிப்பு அடைந்தவர்கள் ஆஸ்பத்திரிகளை தேடி வருகிறார்கள்.

ஆக்சிஜன் வசதியுடன் படுக்கை வசதி உள்ளதா? என்று கொரோனா பாதிப்பு அடைந்தவர்கள் ஆஸ்பத்திரிகளை தேடி வருகிறார்கள்.
இதுகுறித்து பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி முதல்வர் டாக்டர் மணி கூறியதாவது:-
ஆக்சிஜன் வசதி
ஈரோடு மாவட்டத்தில் 20-க்கும் மேற்பட்ட தனியார் ஆஸ்பத்திரிகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற 1,278 படுக்கைகள் உள்ளன. ஆனால் தற்போது எந்த ஆஸ்பத்திரியிலும் படுக்கை வசதி இல்லை என்ற நிலை ஏற்பட்டு உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. மருத்துவமனைகளில் விசாரித்தாலும் இந்த பதில்தான் கிடைக்கிறது.
இதற்கு காரணம் ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி பக்கத்து மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானவர்கள் ஈரோட்டில் உள்ள ஆஸ்பத்திரிகளுக்கு சிகிச்சைக்காக வருகிறார்கள். குறிப்பாக சிகிச்சைக்கு வரும் அனைவரும் ஆக்சிஜன் வசதியுடன் படுக்கை வேண்டும் என்று கேட்டு வாங்கி சிகிச்சையில் சேருகிறார்கள். இதனால் ஆக்சிஜன் வசதி உள்ள படுக்கைகள் இல்லை என்ற நிலை ஏற்பட்டு இருக்கிறது. இதன்காரணமாக ஆஸ்பத்திரிகளில் படுக்கை இல்லை என்ற தகவலும் பரவி வருகிறது.
மூச்சுத்திணறல்
கொரோனா சிகிச்சையில் ஆக்சிஜன் மிக முக்கிய பங்களிக்கிறது. கொரோனா பாதிப்பால் மூச்சுத்திணறல் ஏற்படும்போது பாதிக்கப்பட்டவர்களால் மூச்சு விட சிரமம் ஏற்படுகிறது. அப்போது அவர்களுக்கு ஆக்சிஜன் மூலம் சுவாச பிரச்சினை சரி செய்யப்படும். பொதுவாக ஆக்சிஜன் சுவாசிக்கும் அளவு 95-க்கு மேல் இருந்தால் அச்சப்பட வேண்டியது இல்லை. 90 முதல் 95 என்பது சாதாரண விஷயம். 90-க்கு கீழ் அளவு மாறும்போது கண்டிப்பாக ஆக்சிஜன் வழங்க வேண்டும்.
எனவே ஒரு நோயாளிக்கு ஆக்சிஜன் தேவையா என்பதை டாக்டர்தான் முடிவு செய்ய வேண்டும். பொதுவாக தற்போது பலரும் ஓய்வில் இருப்பதால் உடலின் பழக்க வழக்கம் காரணமாக ஆக்சிஜன் அளவு 90 முதல் 95 என்பது சராசரியாக இருக்கிறது.
தேவைக்கு வினியோகம்
ஈரோடு   மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் போதிய அளவு ஆக்சிஜன் உள்ளது. அதுமட்டுமின்றி தேசிய ஆக்சிஜன் உற்பத்தி மையத்தில் இருந்து தேவையான வினியோகமும் உள்ளது. ஆனால் கடந்த சில நாட்களாகவே அத்தியாவசிய தேவை இல்லாமல் ஆக்சிஜன் செலவு குறைக்கப்பட்டு இருக்கிறது. இதனால் தேவைப்படும் நோயாளிகளுக்கு முழுமையாக ஆக்சிஜன் வழங்கப்படுகிறது. பலர் தூங்கும்போது ஆக்சிஜன் வீணாகி வந்தது.
எனவே அதனை கண்டுபிடித்து தேவையற்ற ஆக்சிஜன் இழப்பை கட்டுப்படுத்த குழு அமைக்கப்பட்டு பணியில் ஈடுபடுத்தி வருகிறோம். இதனால் இப்போது ஆக்சிஜன் இழப்பு என்பது இல்லை. மேலும், கொரோனா பாதிப்புக்காக வருபவர்களுக்கு ஆக்சிஜன் தேவையா என்பதை சோதனை செய்து 90-க்கும் அதிகமாக ஆக்சிஜன் அளவு இருப்பவர்கள் கொரோனா சிறப்பு மையத்தில் கண்காணிக்கப்படுகிறார்கள். தொடர் கண்காணிப்பில் வைக்கப்படுவதால் ஒரு வேளை சுவாச பிரச்சினை வந்தால் உடனடியாக அவர்களுக்கு ஆக்சிஜன் வழங்கப்படுகிறது.
டாக்டர்களின் ஆலோசனை
இதுபோல் மாவட்டம் முழுவதும் அரசு ஆஸ்பத்திரிகள், தனியார் ஆஸ்பத்திரிகளில் தேவையற்ற ஆக்சிஜன் செலவு, இழப்புகளை தவிர்க்க மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் உத்தரவின் பேரில் மருத்துவர்கள் குழு அமைக்கப்பட்டு சோதனை செய்து ஆலோசனைகள் வழங்கி வருகிறார்கள்.
பொதுமக்கள் டாக்டர்களின் ஆலோசனை பெற்று தேவை என்றால் ஆக்சிஜன் மூலம் சிகிச்சை பெற்றுக்கொள்ள முன்வரவேண்டும்.
இவ்வாறு அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் மணி கூறினார்.

Next Story