அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றி வருகிறோம்


அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றி வருகிறோம்
x
தினத்தந்தி 13 May 2021 3:16 AM IST (Updated: 13 May 2021 3:16 AM IST)
t-max-icont-min-icon

கொரோனாவை வீழ்த்த அர்ப்பணிப்பு உணர்வு பணியாற்றி வருவதாக செவிலியர்கள் கூறினர்.

விருதுநகர்,
உலகத்தையே தனது கோர பிடிக்குள் வைத்துள்ள கொரோனா பெருந்தொற்று காலமான இந்த காலக்கட்டத்தில், நம் சமூகத்திற்கு செவிலியர்களின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. கொரோனா தொற்றுக்கு ஆளான ஒருவரின் ரத்த சொந்தங்களே அவர்களது அருகே சென்று நின்று பார்க்க அஞ்சுகிற இந்த காலக்கட்டத்தில் தனது உயிரை துச்சம் என நினைத்து முன்களத்தில் நின்று போராடி வருபவர்களில் செவிலியர்களின் பங்கு அளப்பரியதாகும். இதை நாம் யாரும் மறுக்கவும் முடியாது, மறந்து விடவும் கூடாது. இத்தகைய பணியை செய்து வருபவர்களுக்கு நேற்று உலக செவிலியர் தினம் கொண்டாடப்பட்டது. தங்களது உயிரை பொருட்படுத்தமால் மருத்துவ சேவையாற்றும் செவிலியர்கள் கொரோனா கால பணி குறித்து கருத்துகளை பகிர்ந்து கொண்டனர்.
 கிருஷ்ணவேணி (தலைமை செவிலியர்)
பிளாரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்ததினன் உலக செவிலியர் தினமாக அங்கீகரிக்கப்பட்டதை நாங்கள் பெருமையாகக் கருதுகிறோம். அவரது சேவையில் நூறில் ஒரு பங்குகூட நாங்கள் செய்துவிடவில்லை. கொரோனாகாலத்தில் செவிலியர்கள் அனைவரும் அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகிறார்கள். கொரோனாபாதிப்படைந்தவர்கள் குணமடைந்து வரும்நிலையில் ஒருவர் உயிர் இழந்தாலும் எங்களுக்கு மிகுந்த மன வேதனையை தருகிறது. எனவே இந்த தினத்தில் பாதிப்படைந்த அனைவரும் பூரண குணமடைந்து வீடு செல்ல வேண்டுமென பிரார்த்திக்கிறேன்.
இளையராஜா (கொரோனா வார்டு செவிலியர்)
 நாங்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் கொரோனாவார்டில் பணியாற்றுவதை பெருமையாக கருதுகிறேன். கொரோனா பாதிப்படைந்தவர்களுக்கு எங்களால் முடிந்த அளவுக்கு ஆறுதல் கூறுவதுடன் மருத்துவ சேவையாற்றி வருகிறோம்.  பாதிப்பு அடைந்தவர்கள் அந்த பாதிப்பிலிருந்து குணமடைய தேவையான பணிகளை செய்து வருகிறோம். 
லிங்கம்மாள் (சூப்பிரண்டு) 
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. நோய் பாதிக்கப்பட்டு  இருக்கும் பலரை பார்க்கும் போது கொண்டாட்டத்தை தேடி மனம் செல்ல மறுக்கிறது. அதுவரை சேவை ஒன்றே எங்கள் முதல் விருப்பம். எங்களால் முடிந்த அளவுக்கு சிறப்பான சேவையை நாங்கள் செய்து வருகிறோம். பொதுமக்கள் சமூக இடைவெளியையும், முககவசம் அணிவதையும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். 
செவிலியர் லதா
 மாநிலம் முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பெரும் சிரமத்துக்கு மத்தியில் தான் பணிக்கு சென்று வருகிறோம். இப்படி ஒரு மனநிலையில் செவிலியர் தினத்தை எப்படி கொண்டாட முடியும். அதற்கான மனநிலையும் தற்போது இல்லை. டாக்டர்கள், செவிலியர்கள் என பலர் நோயின் பிடியில் சிக்கி சிகிச்சையில் உள்ள போது இது அவசியமும் இல்லை. 
அரசின் நடவடிக்கையால் பலர் விரைவில் குணம் அடைந்து வருவதே எங்களுக்கு பெரும் மகிழ்ச்சியை தருகிறது.
சியாமளா (மூத்த செவிலியர்) 
 கொரோனா பாதிப்பால் செவிலியர் தினத்தை கொண்டாட முடியவில்லை. தற்போது கொரோனா பாதிப்படைந்தவர்களுக்காக  அர்ப்பணிப்பு உணர்வுடன் சேவையாற்றி வருகிறோம். 
விரைவில் கொரோனா பாதிப்பு முடிவுக்கு வரவும், பாதிப்பு அடைந்தவர்கள் அனைவரும் பூரண உடல் நலத்துடன் குணமடையவும் எங்களால் முடிந்த அளவுக்கு பணியாற்றி வருகிறோம்.


Next Story