பாளையங்கோட்டை அருகே கார்-மோட்டார் சைக்கிள் மோதல்; வாலிபர் பரிதாப சாவு
பாளையங்கோட்டை அருகே கார்-மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் பரிதாப இறந்தார்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் சேரன்மாதேவியை சேர்ந்தவர் அண்ணாதுரை மகன் சிதம்பர செல்வம் (வயது 25). பத்தமடையை சேர்ந்தவர் கண்ணன் மகன் முத்துகிருஷ்ணன் (29). இவர்கள் 2 பேரும் கங்கைகொண்டான் சிப்காட்டில் வேலை பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் இவர்கள் நேற்று வேலை முடிந்து ஒரு மோட்டார் சைக்கிளில் தங்கள் ஊருக்கு சென்று கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை சிதம்பர செல்வம் ஓட்டினார்.
பாளையங்கோட்டை அருகே உள்ள தருவை பாலம் அருகே சென்றபோது, அந்த பகுதியில் வந்த ஒரு கார் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட சிதம்பர செல்வம், முத்துகிருஷ்ணன் ஆகிய 2 பேரும் பலத்த காயம் அடைந்தனர்.
உடனே அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சிதம்பர செல்வம் பரிதாபமாக இறந்தார். முத்து கிருஷ்ணனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story