கொரோனா அச்சமின்றி வீதிகளில் வலம் வரும் பொதுமக்கள்
கம்பம் பகுதியில், கொரோனா அச்சமின்றி வீதிகளில் பொதுமக்கள் வலம் வருகின்றனர்.
கம்பம்:
கம்பம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கொரோனா தொற்று நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. அதன்படி கம்பத்தில் நேற்று ஒரே நாளில் 50 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை கம்பத்தில் மட்டும் 370 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பரவலை தடுக்கும் வகையில் தமிழகத்தில் வருகிற 24-ந்தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் கம்பத்தில் ஊரடங்கை யாரும் கடைபிடித்ததாக தெரியவில்லை. காற்றிலே ஊரடங்கு பறந்து கொண்டிருக்கிறது.
கொரோனா அச்சம் சிறிதும் இன்றி வீதிகளில் பொதுமக்கள் வலம் வந்து கொண்டிருக்கின்றனர்.
குறிப்பாக கம்பம் போக்குவரத்து சிக்னலில் இருந்து காந்தி சிலை வரை உள்ள பழக்கடைகள், மளிகை கடைகள், காய்கறி கடைகள், பூக்கடைகள், டீக்கடைகள், உழவர்சந்தை, பூங்கா ரோடு பகுதிகளில் காய்கறி மற்றும் பொருட்கள் வாங்குவதற்கு பொதுமக்கள் குவிந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் முக கவசம் அணியவில்லை.
சமூக இடைவெளி முறையாக பின்பற்றுவதில்லை. ஊரடங்கு அமலில் இருந்தபோதிலும், காலை 6 மணி முதல் இரவு 10 மணி சாலையில் பொதுமக்கள் நடமாட்டம் இருந்து கொண்டே தான் உள்ளது.
எனவே சாலைகளில் தேவையில்லாமல் நடமாடுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
Related Tags :
Next Story