வேலூர் மாவட்டத்தில் கொரோனா பாதித்த 1,500 பேருக்கு வீடுகளில் சிகிச்சை


வேலூர் மாவட்டத்தில் கொரோனா பாதித்த 1,500 பேருக்கு வீடுகளில் சிகிச்சை
x
தினத்தந்தி 13 May 2021 6:06 PM IST (Updated: 13 May 2021 6:06 PM IST)
t-max-icont-min-icon

வேலூர் மாவட்டத்தில் கொரோனா பாதித்த 1,500 பேருக்கு வீடுகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

வேலூர்

கொரோனா பாதிப்பு

வேலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தொற்றை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டாலும் தினமும் ஏராளமான நபர்கள் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். கொரோனா பாதித்த நபர்களுக்கு அரசு, தனியார் மருத்துவமனைகளில் உள்ள கோவிட் சிறப்பு வார்டுகளில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.

தொற்றினால் பாதிக்கப்படும் நபர்கள் முதற்கட்டமாக வேலூர் பென்ட்லேன்ட், இ.எஸ்.ஐ. மருத்துவமனைகளில் சேர்க்கப்படுகிறார்கள். அங்கு அளிக்கப்படும் சிகிச்சையில் பாதிப்பு குறையவில்லை என்றால் அவர்கள் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்படுகிறார்கள். அதேபோன்று கொரோனா பாதிப்பால் மூச்சு திணறலால் அவதிப்படும் நபர்களும் அந்த மருத்துவமனைக்கு மாற்றப்படுகிறார்கள். மாவட்டம் முழுவதும் தற்போது பாதிப்பு மிகவும் அதிகரித்துள்ளது. அதனால் அரசு, தனியார் மருத்துவமனைகளில் உள்ள கொரோனா வார்டு படுக்கைகள் நிரம்பி வருகிறது. எனவே தொற்று பாதித்த நபர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
 
1,500 பேருக்கு வீடுகளில் சிகிச்சை

வேலூர் மாவட்டத்தில் தற்போது 1,500 பேர் வீடுகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், வேலூர் மாவட்டத்தில் கொரோனாவினால் பாதிக்கப்பட்ட 4 ஆயிரம் பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களில் லேசான கொரோனா அறிகுறி மற்றும் 45 வயதுக்கு உட்பட்டவர்கள் அவர்களின் விருப்பத்தின்பேரில் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதன்படி 1,500 பேர் வீடுகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

கொரோனா பாதித்தவரின் வீட்டில் பல நபர்கள் வசித்து வந்தாலோ அல்லது வீட்டில் ஒரு கழிப்பறை மட்டுமே இருந்தால் அந்த நபர்கள் வேலூர் தந்தை பெரியார் அரசு பொறியியல் கல்லூரியில் உள்ள சிறப்பு மையத்தில் அனுமதிக்கப்படுகிறார்கள். வீட்டில் தனிமைப்படுத்தப்படும் நபர்களுக்கு சித்த மருந்து பெட்டகம் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு ஜிங்க், வைட்டமின் மாத்திரைகள் வழங்கப்படும். ஒருவாரத்துக்கு பின்னர் அனைவருக்கும் மீண்டும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும். அதில், அவர்களுக்கு தொற்று இல்லை என்று வந்தால் வீட்டை விட்டு வெளியே செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவித்தனர்.

Next Story