பழுதடைந்த நவீன எரிவாயு தகன மேடையை கலெக்டர் நேரில் ஆய்வு
திருவண்ணாமலையில் பழுதடைந்த நவீன எரிவாயு தகன மேடையை கலெக்டர் சந்தீப் நந்தூரி ஆய்வு செய்தார்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலையில் பழுதடைந்த நவீன எரிவாயு தகன மேடையை கலெக்டர் சந்தீப் நந்தூரி ஆய்வு செய்தார்.
எரிவாயு தகன மேடை
திருவண்ணாமலை அண்ணா நுழைவு வாயில் அருகில் உள்ள ஈசான்ய மைதானத்தில் நகராட்சி நிர்வாகத்திற்கு உட்பட்ட நவீன எரிவாயு தகன மேடை உள்ளது.
இங்கு நாள் ஒன்றுக்கு 3 முதல் 5 உடல்கள் வரை எரிக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த சில தினங்களாக 15-க்கும் மேற்பட்ட உடல்கள் எரிக்கப்பட்டது. இதனால் வெப்பம் தாங்காமல் தகன மேடையில் உள்ள இரும்பு தகடுகள் பழுதடைந்தது.
இதையடுத்து நவீன எரிவாயு தகன மேடை உள்ள வளாகத்திற்கு இறந்தவர்களின் உடல்கள் கட்டைகள் மற்றும் எருக்கள் மூலம் எரிக்கப்பட்டது. இதனால் வரும் நச்சு புகையினால் நோய் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று பொதுமக்கள் குற்றம்சாட்டினர். இதுகுறித்து நேற்று தினத்தந்தி நாளிதழில் செய்தி பிரசுரிக்கப்பட்டது.
கலெக்டர் ஆய்வு
அதனைத்தொடர்ந்து நவீன எரிவாயு தகன மேடையை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு அறிவுறுத்தலின் பேரில் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது தகன மேடை பழுது குறித்த விவரங்களை நகராட்சி ஆணையர் கிருஷ்ணமூர்த்தியிடம் கலெக்டர் கேட்டறிந்தார்.
மேலும் தகன மேடை வளாகத்தை பயன்பாட்டில் இல்லாத சமயத்தை பயன்படுத்தி சுத்தம் செய்து பராமரிக்க உத்தரவிட்டார். அத்துடன் வளாகத்தில் உள்ள செடி, கொடி கழிவுகளையும் அகற்ற உத்தரவிட்டார்.
தொடர்ந்து இத குறித்து கலெக்டர் நிருபர்களிடம் கூறுகையில், நவீன எரிவாயு தகன மேடை உடனடியாக சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. ஓரிரு நாட்களில் நாட்களில் தகனமேடை சரி செய்யப்பட்டு மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். மேலும் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்யவும், எரிக்கவும் உரிய ஏற்பாடுகள் செய்யப்படுகிறது என்றார்.
Related Tags :
Next Story