ரூ.400 கோடி ஏலக்காய் வர்த்தகம் பாதிப்பு


ரூ.400 கோடி ஏலக்காய் வர்த்தகம் பாதிப்பு
x
தினத்தந்தி 13 May 2021 7:32 PM IST (Updated: 13 May 2021 7:32 PM IST)
t-max-icont-min-icon

தமிழகம், கேரளாவில் முழு ஊரடங்கு எதிரொலியாக, ரூ.400 கோடி ஏலக்காய் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.

போடி:

 ஏலக்காய் விற்பனை

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் லட்சக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் ஏலக்காய் விவசாயம் நடைபெறுகிறது. இங்கு விளைகிற ஏலக்காய்கள் கேரள மாநிலம் புத்தடி மற்றும் தேனி மாவட்டம் போடியில் உள்ள நறுமணப் பொருள் வாரியத்தில் ஆன்லைன் மூலம் ஏலமுறையில் விற்பனை செய்யப்படுகிறது.

தினமும் காலை, மாலை என 2 முறை ஏலம் விடப்படுகிறது. இந்த ஏலத்தில் போடி, தேவாரம், கோம்பை,  கம்பம், குமுளி, கட்டப்பனை, வண்டன்மேடு, விருதுநகர், டெல்லி, நாக்பூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் கலந்து கொண்டு ஏலக்காய்களை கொள்முதல் செய்து வருகின்றனர். 

ஒரு நாளைக்கு, ஒரு லட்சம் கிலோ வரை ஏலக்காய் வர்த்தகம் நடைபெறுவது வழக்கம். 

 ரூ.400 கோடி வர்த்தகம் பாதிப்பு

இந்தநிலையில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, கடந்த 8-ந்தேதி முதல் வருகிற 16-ந்தேதி வரை கேரள மாநிலத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. 

இதேபோல் தமிழகத்தில் கடந்த 10-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இதன் எதிரொலியாக புத்தடி, போடியில் நறுமண பொருட்கள் வாரியத்தில் ஏலக்காய் ஏலம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

 இதனால் பல லட்சம் கிலோ ஏலக்காய் தேக்கம் அடையும் நிலை ஏற்பட்டுள்ளது. சுமார் ரூ.400 கோடி ஏலக்காய் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

 தொழிலாளர்கள் வேலை இழப்பு

குறிப்பாக தமிழகம், கேரளா மற்றும் வடமாநிலங்களில் உள்ள ஏலக்காய் கடைகள் மூடப்பட்டுள்ளன. ஏலக்காய் ஏற்றுமதி நடைபெறாததால் ஒரு கிலோவுக்கு ரூ.400 வரை விலை குறைந்து விட்டது. 

இதேபோல் ஏலக்காய் விவசாயிகள், தங்களது தோட்டங்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ஏலக்காய் தோட்ட தொழிலாளர்கள் வேலைக்கு செல்லவில்லை. இதனால் தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களை சேர்ந்த ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டதொழிலாளர்களுக்கு வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது.
--------

Next Story