ஆன்லைனில் ரெம்டெசிவிர் மருந்து வாங்க முயன்றவரிடம் ரூ.40 ஆயிரம் மோசடி


ஆன்லைனில் ரெம்டெசிவிர் மருந்து வாங்க முயன்றவரிடம் ரூ.40 ஆயிரம் மோசடி
x
தினத்தந்தி 13 May 2021 2:28 PM GMT (Updated: 13 May 2021 2:28 PM GMT)

ஆன்லைனில் ரெம்டெசிவிர் மருந்து வாங்க முயன்றவரிடம் ரூ.40 ஆயிரம் மோசடி செய்யப்பட்டது.

மும்பை, 

கொரோனா நோயாளிகளுக்கு ரெம்டெசிவிர் மருந்து செலுத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில் 2-வது அலை காரணமாக கொரோனா பரவல் அதிகரித்ததை அடுத்து அந்த மருந்துக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில் கடந்த 27-ந் தேதி மும்பை கார் பகுதியை சேர்ந்த ஒருவருக்கு ரெம்டெசிவிர் மருந்து தேவைப்பட்டது. இதையடுத்து அவர் ஆன்லைனியில் அந்த மருந்தை வாங்க முயற்சி செய்தார். அப்போது அவர் ஆன்லைனில் இருந்த ஒரு மருந்து கம்பெனியின் செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது எதிர்முனையில் பேசியவர், ரூ.20 ஆயிரத்து 400-ஐ வங்கி கணக்கில் அனுப்பினால் மருந்து தருவதாக கூறினார்.

இதை நம்பி மும்பை கார் பகுதியை சேர்ந்தவர் அவர் கூறிய வங்கி கணக்கிற்கு பணத்தை அனுப்பி வைத்தார். ஆனால் எதிர்முனையில் பேசியவர் பணம் வரவில்லை என கூறி, மீண்டும் ரூ.20 ஆயிரத்து 400-ஐ அனுப்ப வைத்தார். இந்தநிலையில் 2 முறை தனது வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டு இருப்பதை அறிந்து அவர், அந்த நபரிடம் கேட்டார். ஆனால் அந்த நபர் சரியாக பதில் அளிக்காமல் இணைப்பை துண்டிவிட்டார்.

இதனால் தான் ஏமாற்றபட்டதை உணர்ந்த அவர், சம்பவம் குறித்து கார் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து பாட்னாவில் உள்ள மோசடி கும்பலின் வங்கி கணக்கை முடக்கினர்.

மேலும் மும்பையை சேர்ந்தவரிடம் மோசடி செய்த 40 ஆயிரத்து 800-ஐ திரும்ப பெற்றனர். மேலும் ஆன்லைனியில் ரெம்டெசிவிர் விற்பனை செய்வதாக மோசடியில் ஈடுபட்ட கும்பலை தேடி வருகின்றனர்.

Next Story