கர்நாடகத்தில் 2-வது டோஸ் தடுப்பூசி செலுத்த முன்னுரிமை அதிகாரிகளுக்கு, முதல்-மந்திரி எடியூரப்பா உத்தரவு


கர்நாடகத்தில் 2-வது டோஸ் தடுப்பூசி செலுத்த முன்னுரிமை அதிகாரிகளுக்கு, முதல்-மந்திரி எடியூரப்பா உத்தரவு
x
தினத்தந்தி 13 May 2021 8:30 PM IST (Updated: 13 May 2021 8:30 PM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் கொரோனா 2-வது டோஸ் தடுப்பூசி செலுத்த முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு முதல்-மந்திரி எடியூரப்பா உத்தரவிட்டுள்ளார்.

பெங்களூரு, 

கர்நாடகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்து மந்திரிகள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் பெங்களூருவில் உள்ள தனது காவேரி இல்லத்தில் முதல்-மந்திரி எடியூரப்பா நேற்று ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில், மாநிலத்தில் வேகமாக பரவும் கொரோனாவை கட்டுப்படுத்த என்ன மாதிரியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் எடியூரப்பா பேசும்போது கூறியதாவது:-

கர்நாடகத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள பொதுமக்கள் அதிகளவில் மையங்களுக்கு வருகிறார்கள். தடுப்பூசி பற்றாக்குறை பிரச்சினைக்கு தீர்வு காண அதிகாரிகள் தீவிரமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மேலும் இந்த விஷயத்தில் மக்களுக்கு எழுந்துள்ள குழப்பங்களுக்கு தீர்வு காண வேண்டும்.

பெங்களூரு தவிர்த்து பிற மாவட்டங்களுக்கு தடுப்பூசி வினியோகத்தில் எந்த தடையும் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். போதிய அளவுக்கு ஆக்சிஜன் சிலிண்டர்கள் உள்ளன. அதனால் மாவட்டங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

ஆக்சிஜன், ஐ.சி.யு. படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கொரோனா 2-வது டோஸ் செலுத்த முன்னுரிமை அளிக்க வேண்டும். மாவட்டங்களில் தடுப்பூசி இருப்பு குறித்து அதிகாரிகள் தங்களிடம் விவரங்களை வைக்க வேண்டும். தடுப்பூசி வினியோகம் செய்யும் நிறுவனங்களுடன் அதிகாரிகள் தொடர்ந்து தொடர்பில் இருக்க வேண்டும். இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

Next Story