200 ஆக்சிஜன் படுக்கை வசதியுடன் தனி வார்டு


200 ஆக்சிஜன் படுக்கை வசதியுடன் தனி வார்டு
x
தினத்தந்தி 13 May 2021 10:15 PM IST (Updated: 13 May 2021 10:15 PM IST)
t-max-icont-min-icon

முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 200 ஆக்சிஜன் படுக்கை வசதியுடன் அமைக்கப்பட்ட தனி வார்டை அமைச்சர் பொன்முடி திறந்து வைத்தார்.

விக்கிரவாண்டி, 

விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக கூடுகலாக 200 ஆக்சிஜன் படுக்கை வசதிகள் அடங்கிய தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது. இந்த வார்டை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி நேற்று திறந்து வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- 
விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடைமுறைகள் அரசு மருத்துவமனைகளில் காலை 9 மணிக்கும், ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலை 11 மணிக்கும் தொடங்குவதாக தகவல் வந்தது. எனவே மருத்துவமனை போல் ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் இனி காலை 9 மணிக்கே நோய் தடுப்பு பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளேன். கொரோனா தொற்று பரவாமல் தடுக்க பொதுமக்களுடைய ஒத்துழைப்பு தேவை. 

படுக்கை வசதி 

அனைவரும் பல்ஸ் ஆக்ஸோ மீட்டரை வாங்கி வீட்டில் வைத்துக் கொள்ளுங்கள். அதன் மூலம் பரிசோதனை செய்து ஆக்சிஜன் அளவை தெரிந்து கொள்ளலாம். இதில் ஆக்சிஜன் 90-க்கும் கீழ் வந்தால், சம்பந்தப்பட்டவர்கள் உடனே சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுக்கொள்ள  உதவியாக இருக்கும். விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்காக ஏற்கனவே 460 படுக்கை வசதிகள் உள்ளன.
தற்போது புதிய கட்டிடத்தில் கூடுதலாக 200 படுக்கைவசதிகள் அமைக்கப்பட்டுன்னது. இதேபோல் விழுப்புரம் அரசு மருத்துவமனையிலும் படுக்கை வசதி ஏற்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார். 
ஆய்வின்போது அமைச்சர் செஞ்சி மஸ்தான், மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை, கூடுதல் கலெக்டர் ஸ்ரேயா பி.சிங்., போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன், எம்.பி.க்கள் டாக்டர் கவுதமசிகாமணி, ரவிக்குமார், தி.மு.க., எம்.எல்.ஏ.க்கள் புகழேந்தி, டாக்டர் லட்சுமணன், மணிக்கண்ணன், பா.ம.க., சிவக்குமார், கல்லூரி டீன் குந்தவி தேவி, சுகாதார துணை இயக்குனர் செந்தில்குமார், மருத்துவ கண்காணிப்பாளர் புகழேந்தி, டாக்டர்கள் சாந்தி, வெங்கடேசன், இளையராஜா, தாசில்தார் தமிழ்செல்வி, வட்டார வளர்ச்சி அலுவலர் முபாரக் அலிபேக் உள்பட பலர் உடன் இருந்தனர்.

Next Story