மத்திய கூட்டுறவு வங்கி பணியாளர்கள் பணியை புறக்கணித்து போராட்டம்


மத்திய கூட்டுறவு வங்கி பணியாளர்கள் பணியை புறக்கணித்து போராட்டம்
x
தினத்தந்தி 13 May 2021 10:44 PM IST (Updated: 13 May 2021 10:44 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா தடுப்பு நடவடிக்கை எடுக்கக்கோரி விழுப்புரத்தில் மத்திய கூட்டுறவு வங்கி பணியாளர்கள் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

விழுப்புரம், மே.14-

விழுப்புரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் பணியாற்றி வந்த உதவியாளர் ஒருவர் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு நேற்று முன்தினம் இறந்தார். மேலும் சிலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதையடுத்து அந்த வங்கியில் நோய் தடுப்பு நடவடிக்கை பணிகளை மேற்கொள்ள வேண்டும். ஆனால் நோய் தடுப்பு நடவடிக்கை பணிகளை மேற்கொள்ளாததால் அச்சமடைந்த மத்திய கூட்டுறவு வங்கி பணியாளர்கள் 40-க்கும் மேற்பட்டோர் நேற்று காலை பணியை புறக்கணித்து விட்டு தற்செயல் விடுப்பு எடுத்து வங்கி முன்பு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாதுகாப்பு உபகரணங்கள்

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், விழுப்புரம் மாவட்டத்தில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் 26 கிளை வங்கிகள் உள்ளன. இந்த வங்கிகளில் 150 பேர் பணியாற்றி வருகிறோம். நாங்கள் பாதுகாப்பான முறையில் பணியாற்ற எங்கள் அனைவருக்கும் கொரோனா பாதுகாப்பு உபகரணங்களை வழங்க வேண்டும். 50 சதவீத பணியாளர்களை மட்டுமே பணியில் அமர்த்த வேண்டும். ஏதேனும் வங்கி கிளையில் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டால் உடனே அந்த வங்கி கிளையை தற்காலிகமாக மூடி நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும், அதே நேரத்தில் மற்ற பணியாளர்கள் தனிமைப்படுத்திக்கொள்ள 14 நாட்கள் விடுமுறை அளிக்க வேண்டும், கொரோனா தடுப்பூசி போடுவதற்கும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இதுகுறித்த தகவல் அறிந்ததும் வங்கி உயர் அதிகாரிகள் அங்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பணியாளர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது  அவர் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். அதன் பிறகு பணியாளர்கள் அனைவரும் தங்கள் போராட்டத்தை கைவிட்டனர். இந்த திடீர் போராட்டம் காரணமாக அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story