திருமணம் செய்வதாக ஏமாற்றி இளம்பெண்ணை கர்ப்பமாக்கிய டிரைவர் கைது


திருமணம் செய்வதாக ஏமாற்றி இளம்பெண்ணை கர்ப்பமாக்கிய டிரைவர் கைது
x

கோத்தகிரி அருகே திருமணம் செய்வதாக ஏமாற்றி இளம்பெண்ணை கர்ப்பமாக்கிய டிரைவரை போலீசார் கைது செய்தனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது.

கோத்தகிரி,

கோத்தகிரி அருகே உள்ள ஆதிவாசி கிராமத்தை சேர்ந்த 19 வயது இளம் பெண்ணுக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவரை பெற்றோர் கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்சென்றனர்.

அப்போது அவரை டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது அதிர்ச்சி அடைந்தனர். அவர் 8 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. அவருக்கு இன்னும் திருமணமாகாததால் இது குறித்து கோத்தகிரி போலீஸ் நிலையத்துக்கு தகவலும் தெரிவித்தனர்.

இதையடுத்து போலீசார் ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்று அந்த இளம்பெண்ணிடம் விசாரணை செய்தனர். அதில் கோத்தகிரி அருகே உள்ள கெங்கரையை சேர்ந்த கார் டிரைவரான சோமசுந்தரம் (வயது 35) என்பவர் திருமண ஆசைவார்த்தை கூறி பலமுறை உல்லாசமாக இருந்ததும், அதில் அவர் கர்ப்பமானதும் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் சோமசுந்தரத்தை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கைதான சோமசுந்தரத்துக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து போலீசார் கூறும்போது, வாகன வசதி இல்லாத ஆதிவாசி கிராமத்துக்கு சோமசுந்தரம் அடிக்கடி காரில் சென்று உள்ளார். அப்போது அந்த இளம்பெண்ணுக்கும் அவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு உள்ளது. இதனால் அவர் தனக்கு திருமணம் நடந்ததை மறைத்து அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி ஏமாற்றி உல்லாசம் அனுபவித்து உள்ளார் என்றனர்.


Next Story