மேட்டுப்பாளையத்தில் காய்கறி மண்டிகளுக்கு 24 ந் தேதி வரை விடுமுறை
மேட்டுப்பாளையத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக காய்கறி மண்டிகளுக்கு வருகிற 24-ந் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக வர்த்தக சபை தலைவர் வைத்திலிங்கம் அறிவித்துள்ளார்.
மேட்டுப்பாளையம்
மேட்டுப்பாளையத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக காய்கறி மண்டிகளுக்கு வருகிற 24-ந் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக வர்த்தக சபை தலைவர் வைத்திலிங்கம் அறிவித்துள்ளார்.
மேட்டுப்பாளையம் காய்கறி மார்க்கெட்
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம்-அன்னூர் ரோட்டில் உள்ள புதிய காய்கறி மார்க்கெட்டில் 75-க்கும் மேற்பட்ட காய்கறி மண்டிகள் உள்ளன. இங்கு நீலகிரி மாவட்டம் மற்றும் கர்நாடகாவில் இருந்து முட்டைக்கோஸ், கேரட், பீட்ரூட், பீன்ஸ் ஆகிய காய்கறிகள் தினசரி லாரிகளில் வந்து வருகின்றன.
மண்டிகளில் ஏலம் முடிந்த பின்னர் தமிழகம் மற்றும் கேரளாவிற்கு காய்கறிகள் லாரிகளில் அனுப்பி வைக்கப்படுகின்றன. மார்க்கெடடில் சுமார் 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். தற்போது ஊரடங்கையொட்டி மார்க்கெட்டில் உள்ள காய்கறி மண்டிகள் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரை செயல்பட்டு வந்தன.
இந்த நிலையில் கொரோனா தொற்று 2-வது அலை வேகமாக பரவுவதையடுத்து மார்க்கெட்டில் உள்ள காய்கறி மண்டிகள் அனைத்திற்கும் வருகிற 24-ந் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விவசாயிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
24-ந் தேதி வரை விடுமுறை
இதுகுறித்து மேட்டுப்பாளையம் காய்கறி வர்த்தக சபை தலைவர் வைத்திலிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மேட்டுப்பாளையம், சிறுமுகை, காரமடை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமடைந்து வேகமாக பரவி வருகிறது. இதில், மார்க்கெட்டில் 10-க்கும் மேற்பட்டவர்களுக்கு பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரியவருகிறது.
எனவே தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டும், கொரோனா பரவலை தடுக்கவும் மேட்டுப்பாளையம் காய்கறி மார்க்கெட்டுக்கு இன்று (வெள்ளிக்கிழமை) முதல் வருகிற 24-ந்தேதி வரை விடுமுறை அளிக்கப்படுகிறது.
இதற்கு அனைவரும் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது. மேலும் மார்க்கெட்டில் உள்ள உருளைக்கிழங்கு மண்டிகள் அனைத்தும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரை செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story