கொரோனா விதிமீறலை கண்காணிக்க சிறப்பு பறக்கும் படை


கொரோனா விதிமீறலை கண்காணிக்க சிறப்பு பறக்கும் படை
x
தினத்தந்தி 13 May 2021 11:09 PM IST (Updated: 13 May 2021 11:09 PM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில் கொரோனா விதிமீறலை கண்காணிக்க சிறப்பு பறக்கும் படை அமைக்கப்பட்டு உள்ளதாக சப்-கலெக்டர் வைத்திநாதன் தெரிவித்தார்.

பொள்ளாச்சி

பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில் கொரோனா விதிமீறலை கண்காணிக்க சிறப்பு பறக்கும் படை அமைக்கப்பட்டு உள்ளதாக சப்-கலெக்டர் வைத்திநாதன் தெரிவித்தார்.

சிறப்பு பறக்கும் படை

கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த நிலையில் பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் ஊரடங்கை மீறுவோர் குறித்து புகார் தெரிவிக்க கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டு உள்ளது. 

மேலும் கண்காணிப்பு சிறப்பு பறக்கும் படை அமைக்கப்பட்டு, விதிமுறைகளை மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. இதுகுறித்து சப்-கலெக்டர் வைத்திநாதன் கூறியதாவது:-

கொரோனா நோய் தொற்றின் வேகம் அதிகரித்து வரும் நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த நிலையில் வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட பொள்ளாச்சி, ஆனைமலை, கிணத்துக்கடவு, வால்பாறை தாலுகாக்களில் வணிக நிறுவனங்களில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கிறது. 

பொதுவெளியில் நடமாடும் பொதுமக்கள் பெரும்பாலும் முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் கூட்டம், கூட்டமாக நிற்பது அதிகரித்து உள்ளது.

கட்டுப்பாட்டு அறை

மேலும் வணிக நிறுவனங்கள், மளிகை கடைகள், காய்கறி கடைகள், ஓட்டல்கள், தேநீர்கடைகள் உள்ளிட்ட பல்வேறு அனுமதிக்கப்பட்ட கடைகளில் வெப்பநிலை பரிசோதனை, கிருமி நாசினி மருந்து வைத்திருத்தல் ஆகியவை பயன்பாட்டில் இல்லை. 

அரசின் விதிமுறைகளை மீறி செயல்படுவதாகவும், வரையறுக்கப்பட்ட நேரத்திற்கும் கூடுதலாக பல்வேறு கடைகள் விதிகளை மீறி செயல்படுவதாக புகார்கள் வருகின்றன.

எனவே பொதுமக்கள் தவறாமல் முகக்கவசம் அணிவதை உறுதி செய்யவும், வணிக பகுதிகளில் சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்ற பாதுகாப்பு வழிமுறைகள் முறையாக கடைப்பிடிக்கப்படுகிறதா? என்பது குறித்து சப்-கலெக்டர் அலுவலக கட்டுப்பாட்டு அறைக்கு வரும் புகார்கள் குறித்து விசாரணை மேற்கொள்ளவும், அபராதம் விதிக்க கொரோனா நோய் தொற்று கண்காணிப்பு சிறப்பு படைக்கும் படை தாலுகா அளவில் அமைக்கப்பட்டு உள்ளது.

இதில் தனி தாசில்தார்கள், மண்டல துணை தாசில்தார்கள், துணை தாசில்தார்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் கொண்ட பறக்கும் படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அபராதம் விதிப்பு, கடைகளுக்கு சீல்

காலை 7 மணி முதல் 2 மணி ஒரு குழுவும், 2 மணி முதல் இரவு 9 மணி வரை ஒரு குழுவும் என சுழற்சி முறையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக வருவாய் கோட்டத்தில் 18 பறக்கும் படை அமைக்கப்பட்டு உள்ளது. 

இந்த பறக்கும் படையினர் அரசின் வழிகாட்டுகளை மீறும் கடைகள் மற்றும் நபர்கள் அபராதம் விதிப்பார்கள். தேவைப்பட்டால் கடைகள் பூட்டி சீல் வைக்கப்படும். பொது இடங்களில் முகக்கவசம் அணியாத மற்றும் எச்சில் துப்பும் பொதுமக்களுக்கு அபராதம் விதிக்கப்படும். 

இதுவரைக்கும் பொள்ளாச்சி தாலுகாவில் ரூ.1 லட்சத்து 62 ஆயிரத்து 700, கிணத்துக்கடவு தாலுகாவில் ரூ.38,900, ஆனைமலை தாலுகாவில் ரூ. 39,700, வால்பாறை தாலுகாவில் ரூ. 17,700 அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது. 

மேலும் தேநீர் கடை, சலூன் கடை உள்பட 5 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு உள்ளது. அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள், வியாபாரிகள் உள்பட அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story