வால்பாறையில் வீடுவீடாக சென்று காய்ச்சல் பரிசோதனை
வால்பாறை பகுதியில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் வீடுவீடாக சென்று சுகாதாரத்துறையினர் காய்ச்சல் பரிசோதனை செய்தனர்.
வால்பாறை
வால்பாறை பகுதியில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் வீடுவீடாக சென்று சுகாதாரத்துறையினர் காய்ச்சல் பரிசோதனை செய்தனர்.
மருத்துவ முகாம்கள்
வால்பாறையில் தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தி கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
மேலும் கொரோனா பரவலை தடுப்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதுதவிர அனைத்து எஸ்டேட் பகுதிகளிலும் தொடர்ச்சியாக மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் வால்பாறை நகர் பகுதியில் உள்ள குடியிருப்புகளிலும் காய்ச்சல் பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.
வீடுவீடாக சென்று பரிசோதனை
வால்பாறை துளசிங் நகர் பகுதியில் நேற்று அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சுகாதார பணியாளர்கள் வீடு வீடாக சென்று காய்ச்சல் பரிசோதனை மேற்கொண்டனர். தேவைப்படுகிறவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்து கொள்வதற்கும் அறிவுரைகள் வழங்கப்பட்டது.
இதுகுறித்து வால்பாறை அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களின் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் பாபுலட்சுமண் கூறுகையில், வால்பாறை நகரில் உள்ள குடியிருப்பு பகுதி மக்கள் மருத்துவ பணியாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து வீட்டை விட்டு வெளியே வருவதை குறைத்து கொள்ள வேண்டும். அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே வீட்டை விட்டு வெளியே வரவேண்டும்.
அவ்வாறு வரும்போது முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். காய்ச்சல், சளி தொடர்ந்து இருந்தால் தாங்களாகவே முன்வந்து மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளுங்கள். தடுப்பூசி போடாதவர்கள் விரைவாக தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள். இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story