பொருட்கள் மாயமானதால் காலியாக கிடந்ததிருவாடானை எம்.எல்.ஏ. அலுவலகம்
திருவாடானை எம்.எல்.ஏ. அலுவலகத்தில் இருந்த பொருட்கள் அனைத்தும் மாயமாகி அலுவலகம் காலியாக கிடந்ததால், அதனை சுத்தம் செய்ய சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்
தொண்டி
திருவாடானை எம்.எல்.ஏ. அலுவலகத்தில் இருந்த பொருட்கள் அனைத்தும் மாயமாகி அலுவலகம் காலியாக கிடந்ததால், அதனை சுத்தம் செய்ய சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
எம்.எல்.ஏ. அலுவலகம்
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை யூனியன் அலுவலக வளாகத்தில், திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ. அலுவலகமும் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகம் தொடங்கும்போது நாற்காலிமற்றும் கம்ப்யூட்டர், மின்விசிறிகள் என ஏராளமான பொருட்கள் அரசின் சார்பில் வழங்கப்பட்டன.
கடந்த 2016-ம் ஆண்டு திருவாடானை தொகுதி சட்டமன்ற உறுப்பினராக கருணாஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் இந்த அலுவலகத்திற்கு பெரும்பாலும் வருவதில்லை. ஆனால் அவரது சார்பில் பணியாளர்கள் இந்த அலுவலகத்தை பயன்படுத்தி வந்தனர்.
சமீபத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து வருவாய்த்துறையினர் இந்த அலுவலகத்தை பூட்டி சீல் வைத்தனர். இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கரு.மாணிக்கம் வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆனார்.
பொருட்கள் மாயம்
இதையடுத்து திருவாடானை எம்.எல்.ஏ. அலுவலகத்தை சுத்தம் செய்ய வேண்டும் என காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் வருவாய்த்துறை அலுவலர்களிடம் கூறினர். இதனால் எம்.எல்.ஏ. அலுவலக சாவியை அதிகாரிகள் அவர்களிடம் வழங்கினர்.
பின்னர் காங்கிரஸ் நிர்வாகிகள் அலுவலகத்தை சுத்தம் செய்ய அங்கு சென்றனர். அலுவலகத்தை திறந்த போது அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
அலுவலகத்தின் உள்ளே இருந்த பொருட்கள் அனைத்தும் மாயமாகி இருந்தன. நாற்காலி, மேஜை, மின்விசிறிகள் மற்றும் கம்ப்யூட்டர் உள்ளிட்ட எந்த பொருட்களும் இன்றி, காலியாக வெறும் அலுவலகம் மட்டுமே உள்ளது.
புத்தகங்களும் இல்லை
கருணாஸ் எம்.எல்.ஏ.வாக இருந்தபோது, சிவில் சர்வீசஸ் மற்றும் அரசின் போட்டி தேர்வு எழுதுபவர்கள் படித்து பயன்பெறும் வகையில் புத்தகங்களை வாங்கி ஒரு சிறிய நூலகம் ஒன்றையும் இந்த அலுவலகத்தின் ஒரு பகுதியில் அமைத்து இருந்தார். அந்த புத்தகங்களும் அங்கு இல்லை.
இதுகுறித்து காங்கிரஸ் கட்சியினர் திருவாடானை தாசில்தார் செந்தில்வேல் முருகனிடம் தெரிவித்தனர். ராமநாதபுரம் மாவட்ட கலெக்டரின் கவனத்திற்கும் புகாராக கொண்டு சென்றுள்ளனர். இதுதொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. எம்.எல்.ஏ. அலுவலக பொருட்கள் மாயமானது அப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டது.
Related Tags :
Next Story