கரூர் மாவட்டத்தில் 8 இடங்களில் ஆக்சிஜன் உற்பத்தி மையம் அமைச்சர் வி.செந்தில்பாலாஜி பேட்டி


கரூர் மாவட்டத்தில் 8 இடங்களில் ஆக்சிஜன் உற்பத்தி மையம்  அமைச்சர் வி.செந்தில்பாலாஜி பேட்டி
x
தினத்தந்தி 13 May 2021 11:25 PM IST (Updated: 13 May 2021 11:25 PM IST)
t-max-icont-min-icon

கரூர் மாவட்டத்தில் 8 இடங்களில் ஆக்சிஜன் உற்பத்தி மையம் அமைக்கப்பட உள்ளதாக அமைச்சர் வி.செந்தில்பாலாஜி கூறினார்.

கரூர்
ஆலோசனை கூட்டம்
கரூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடான ஆய்வுக்கூட்டம் நேற்று கரூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு  மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தலைமை தாங்கி பேசினார்.. மாவட்ட கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே, கரூர் எம்.பி. ஜோதிமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
அதனைத்தொடர்ந்து, கரூர் நகரப்பகுதியில் அமைந்துள்ள பழைய தலைமை அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா தொற்றாளர்களுக்கான சிறப்பு சிகிச்சை மையத்தினை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி நேரில் பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டிளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
3 நிலைகளில் கட்டுப்படுத்த...
தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றை தடுத்து நிறுத்த விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இதனடிப்படையில் கலெக்டர் அலுவலகத்தில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் மற்றும் துறை அதிகாரிகளுடன் பேசி கொரோனா தொற்றை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை தொடங்கியுள்ளோம். ஆக்சிஜன் தேவைப்படுவோரின் எண்ணிக்கையும், நோயால் பாதுக்கப்படுவோரின் எண்ணிக்கையும் அதிகரிப்பதால் இதை கருத்தில் கொண்டு மூன்று நிலைகளில் இந்நோயை கட்டுப்படுத்த முடிவு செய்துள்ளோம். 
ஆக்சிஜன் மையங்கள்
முதல் நிலையில் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டவுடன் வீடுகளில் தனிமைப்படுத்தப் பட்டவர்களுக்கு தனி கழிப்பறை இருந்தால் மட்டும் அவர்களை வீடுகளில் தனிமைப்படுத்துவது, அறைகள், கழிப்பறை இல்லையென்றால் கொரோனா வார்டுக்கு அழைத்து வந்து சிகிச்சையளிப்பது. 2-ம் நிலையில் குறைந்தபட்ச ஆக்சிஜன் தேவைப்படுவோருக்கு 40 படுக்கைகளில் சிகிச்சை பெறுவோருக்கு ஆக்சிஜன் உற்பத்தி மையங்களை மாவட்டங்களில் 8 இடங்களில் நிறுவி வருகிற 25-ந்தேதி முதல் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுத்துள்ளோம். 
முதல்-அமைச்சர் உறுதி
3-ம் நிலையாக அவரச நிலைகளில் வரக்கூடிய நோயாளிகளை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்து அவர்களை காப்பாற்ற முடிவு செய்துள்ளோம். வேலாயுதம்பாளையம், கரூர் பழைய தலைமை மருத்துவமனை, குளித்தலை, காணியாளம்பட்டி, வெள்ளியணை, கோவக்குளம் பகுதிகளில் ஆக்சிஜன் உற்பத்தி மையம் அமைக்கும் பணிகளை தொடங்குகிறோம்.தமிழகத்தில் கொரோனா தொற்றை முற்றிலுமாக மக்களிடம் இருந்து விலக்கி எடுத்து மக்கள் இயல்புநிலைக்கு திரும்பவேண்டும் என்பதில் முதல்-அமைச்சர் உறுதியாக உள்ளார்.இதற்காக நிறைய நிதிகளை வழங்கியுள்ளார். 
கொரோனா இல்லாத மாவட்டம்
கரூர் மாவட்டத்திற்கு தேவையானவற்றை கலெக்டரும், மருத்துவ அதிகாரிகளும் எடுத்து கூறியுள்ளார்கள். விரைவில் தொற்று இல்லாத மாவட்டமாக கரூர் மாவட்டத்தை உருவாக்குவோம். கரூர் அரசு மருத்துவக்கல்லூரியில் உள்ள 200 படுக்கைகள் உள்ளன. 250 படுக்கைகளில் ஆக்சிஜன் வசதியுள்ளது. 50 ஐசியு படுக்கைகள் உள்ளன. 
கூடுதலாக ஆக்சிஜன் தேவைப்படுவதால் போர்க்கால அடிப்படையில் ஆக்சிஜன் உற்பத்தி மையத்தை தொடங்கி உள்ளோம். ஆம்புலன்ஸ் தட்டுப்பாடு இருப்பதால் தனியார் ஆம்புலன்சிடம் பேசி அவர்களையும் பயன்படுத்த கலெக்டரிடம் பேசியுள்ளோம். கொரோனாவால் இறந்தவர்களை அடக்கம் செய்ய கூடுதலாக கட்டணம் கேட்பதாக புகார் வந்தது. இதனால் அந்த கட்டணத்தை மாவட்ட நிர்வாகமே செலுத்திடும். இதனை கண்காணிக்க அதிகாரிகளை நியமிக்க உள்ளதாக கலெக்டரும் கூறியுள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார். 
பேட்டியின்போது, சட்டமன்ற உறுப்பினர்கள் இரா.மாணிக்கம் (குளித்தலை), ஆர்.இளங்கோ (அரவக்குறிச்சி), க.சிவகாமசுந்தரி (கிருஷ்ணராயபுரம்,  மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாங், அரசு அதிகாரிகள், சுகாதார பணியாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story