வீட்டில் பணிபுரியும் பெண்ணுக்கு கொரோனா: முன் எச்சரிக்கையாக தனிமைப்படுத்தி கொண்ட கலெக்டர்
வேலூர் மாவட்ட கலெக்டர் வீட்டில் பணிபுரியும் பெண் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டார். அதனால் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக கலெக்டர் மற்றும் அவருடைய குடும்பத்தினர் வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டனர்.
வேலூர்
பெண்ணுக்கு கொரோனா
வேலூர் மாவட்ட கலெக்டராக பணியாற்றி வருபவர் சண்முகசுந்தரம். வேலூர் அண்ணாசாலையில் உள்ள கலெக்டர் பங்களாவில் தங்கி பணிபுரிந்த பெண்ணுக்கு கடந்த 10-ந் தேதி கொரோனா தொற்று உறுதியானது. அதையடுத்து அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அதைத்தொடர்ந்து முன்எச்சரிக்கை நடவடிக்கையாக கலெக்டர் சண்முகசுந்தரம் மற்றும் அவருடைய குடும்பத்தினர் வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டனர். மேலும் கலெக்டர், குடும்பத்தினர் மற்றும் அங்கு பணிபுரியும் நபர்களுக்கும் சளிமாதிரி சேகரிக்கப்பட்டது.
தொற்று இல்லை
அதன் பரிசோதனையின் முடிவில் கலெக்டர், அவருடைய குடும்பத்தினர் உள்பட அனைவருக்கும் தொற்று பாதிப்பு இல்லை என்று தெரிய வந்தது. ஆனால் கலெக்டர் தொடர்ந்து வீட்டில் தன்னை தனிமைப்படுத்தி கொண்டுள்ளார்.
கொரோனா தடுப்பூசி 2 டோஸ்களையும் கலெக்டர் சண்முக சுந்தரம் போட்டுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
இதன் காரணமாக கடந்த 3 நாட்களாக கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான காணொலி காட்சி ஆலோசனை கூட்டம் உள்பட அனைத்து கூட்டங்களும் மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன் தலைமையில் நடைபெற்றது.
கலெக்டர் மற்றும் அவருடைய குடும்பத்தினர், வீட்டில் பணிபுரியும் அனைவருக்கும் மீண்டும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது.
Related Tags :
Next Story