மானாமதுரை அரசு மருத்துவமனையில்-கொரோனா பாதித்த கர்ப்பிணிகளுக்கு சிறப்பு சிகிச்சை மையம்


மானாமதுரை அரசு மருத்துவமனையில்-கொரோனா பாதித்த கர்ப்பிணிகளுக்கு சிறப்பு சிகிச்சை மையம்
x
தினத்தந்தி 13 May 2021 11:39 PM IST (Updated: 13 May 2021 11:39 PM IST)
t-max-icont-min-icon

கொரோனாவால் பாதிக்கப்படும் கர்ப்பிணிகளுக்கு சிகிச்சை அளிக்க மானாமதுரை அரசு மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது என்று சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி கூறினார்.

சிவகங்கை,

கொரோனாவால் பாதிக்கப்படும் கர்ப்பிணிகளுக்கு சிகிச்சை அளிக்க மானாமதுரை அரசு மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது என்று சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி கூறினார்.

கொரோனா பரவல் அதிகரிப்பு

இது குறித்து சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி நிருபர்களிடம் கூறியதாவது:-
சிவகங்கை மாவட்டத்தில் தற்போது கொரோனா பரவல் மற்றும் நுரையீரல் தொற்று காரணமாக பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எனவே பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிட போது மான ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கை வசதிகள் அதிக அளவில் மாவட்டத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் அமைக்கப்பட்டு வருகிறது.
 சிவகங்கை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஏற்கனவே உள்ள படுக்கை வசதிகளுடன் தற்போது 100 படுக்கை வசதிகள் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ளது. இது போல் காரைக்குடி பழைய அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 20 படுக்கை வசதிகள் உள்ளன. இது தவிர காரைக்குடி புது மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 50 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

தனி சிகிச்சை மையம்

தற்போது கொரோனா தொற்று கண்டறியப்பட்ட கர்ப்பிணிகளுக்கு சிகிச்சை வழங்கும் வகையில் மானாமதுரை அரசு மருத்துவமனையில் சிறப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. பாதிக்கபட்டவர்களுக்கு குழந்தை பிறப்பதற்கு 10 தினங்கள் முன்பு இருந்து குழந்தை பிறந்த பின்பு வரை என 20 நாட்களுக்கு முழுமையாக கண்காணித்து முழுமையான சிகிச்சை வழங்கப்படும். ஏற்கனவே, சிவகங்கையில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஒரு சிறப்பு சிகிச்சை மையம் செயல்பட்டு வருகிறது. அத்துடன் கூடுதலாக தற்போது மானாமதுரையில் அமைக்கப்பட்டுள்ளது. தேவைக்கு ஏற்ப மற்ற பகுதிகளில் சிறப்பு சிகிச்சை மையம் அமைக்கப்படும்.

கூடுதலாக 30 டாக்டர்கள்

இது தவிர தேவகோட்டையில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 100 படுக்கைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கபட்டு வருகிறது. காரைக்குடியில் புதிதாக 200 படுக்கை வசதிகளுடன் கூடிய மருத்துவமனை கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது.
இன்னும் 10 அல்லது 15 நாளில் இவை செயல்பாட்டிற்கு வரும்.
தற்போது சிவகங்கை மாவட்டத்தில் 30 டாக்டர்கள் மற்றும் 80 செவிலியர்கள் புதியதாக நியமனம் செய்யப்பட உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது மருத்துவ கல்லுாரி டீன் ரெத்தினவேல், மருத்துவ அலுவலர் டாக்டர் மீனாள், உதவி மருத்துவ அலுவலர் முகமதுரபி ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story