வேறு சாதி வாலிபரை காதலித்த கல்லூரி மாணவி ஆணவ கொலை


வேறு சாதி வாலிபரை காதலித்த கல்லூரி மாணவி ஆணவ கொலை
x
தினத்தந்தி 13 May 2021 11:54 PM IST (Updated: 13 May 2021 11:54 PM IST)
t-max-icont-min-icon

விஜயநகர் அருகே வேறு சாதி வாலிபரை காதலித்ததால் கல்லூரி மாணவி ஆணவ கொலை செய்த பெற்றோர் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

விஜயநகர்:

விஜயநகர் அருகே வேறு சாதி வாலிபரை காதலித்ததால் கல்லூரி மாணவி ஆணவ கொலை செய்த பெற்றோர் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

காதல்

விஜயநகர் மாவட்டம் ஹரப்பனஹள்ளி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட யடிஹள்ளி கிராமத்தில் ஒரு தம்பதி வசித்து வருகின்றனர். அந்த தம்பதியின் மகள் பூஜா (வயது 18). இவர், கல்லூரி ஒன்றில் பி.யூ.சி. முதலாம் ஆண்டு படித்து வந்தார். அந்த மாணவியும், அதே கிராமத்தில் வசிக்கும் ஒரு வாலிபரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். அந்த வாலிபர் வேறு சாதியை சேர்ந்தவர் ஆவார். இதுபற்றி மாணவியின் பெற்றோருக்கு தெரியவந்துள்ளது. உடனே அவர்கள் தங்களது மகளை கண்டித்துள்ளனர். 

இதற்கிடையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு பெற்றோரின் எதிர்ப்பை மீறி அந்த வாலிபருடன், மாணவி வீட்டை விட்டு ஓடிப்போய் விட்டார். பக்கத்து கிராமத்தில் 2 பேரும் தங்கி இருந்தார்கள். மேலும் திருமணம் செய்வதற்கு அந்த வாலிபரும், மாணவியும் முடிவு செய்திருந்தார்கள். இதுபற்றி மாணவியின் பெற்றோர், உறவினர்களுக்கு தெரியவந்தது.

எரித்து கொலை

உடனே அவர்கள், பக்கத்து கிராமத்திற்கு சென்று தங்களது மகளை வீட்டுக்கு அழைத்து வந்திருந்தனர். இந்த நிலையில், அந்த மாணவிக்கு விஷத்தை கொடுத்து ஆணவ கொலை செய்ததுடன், அவரது உடலை குடும்பத்தினர் எரித்து விட்டதாகவும் கூறப்படுகிறது. 

இதுபற்றி ஹரப்பனஹள்ளி போலீசாருக்கு, கிராம மக்கள் தகவல் தெரிவித்தனர். போலீசார் மாணவியின் வீட்டுக்கு சென்று பெற்றோரிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது தங்களது மகள் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாகவும், அவளது உடலை எரித்து விட்டதாகவும் பெற்றோர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

ஆனால் வேறு சாதி வாலிபரை காதலித்ததால் மாணவியை ஆணவ கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது. அதாவது மாணவிக்கு விஷத்தை வலுக்கட்டாயப்படுத்தி கொடுத்ததுடன், பின்னர் மாணவியை எரித்துக் கொலை செய்ததும் தெரியவந்துள்ளது. 

இதுகுறித்து ஹரப்பனஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியின் பெற்றோர் உள்பட 7 பேரை கைது செய்துள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் விஜயநகரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story