முழு ஊரடங்கு காலத்திலும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் நெல்லை டவுன்


முழு ஊரடங்கு காலத்திலும்  போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் நெல்லை டவுன்
x
தினத்தந்தி 14 May 2021 12:05 AM IST (Updated: 14 May 2021 12:05 AM IST)
t-max-icont-min-icon

முழு ஊரடங்கு காலத்திலும் நெல்லை டவுன் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கிறது.

நெல்லை:
முழு ஊரடங்கு காலத்திலும் நெல்லை டவுன் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கிறது.

முழு ஊரடங்கு

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. நேற்று 4-வது நாளாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதில் மதியம் 12 மணி வரை காய்கறி கடைகள், பழக்கடைகள், மளிகை கடைகள், அனைத்து மருந்து கடைகள் திறந்திருக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

நெல்லை மாநகரில் காலை நேரத்தில் அத்தியாவசிய பொருட்கள் வாங்க பொது மக்கள் அங்குமிங்கும் வாகனங்களில் பயணிக்கிறார்கள். 
இதையொட்டி ஊரடங்கு அறிவிக்கப்பட்ட போதிலும் வாகனங்களில் செல்வோரை போலீசார் தடுத்து நிறுத்தி அறிவுரைகள் கூறி, விழிப்புணர்வு ஏற்படுத்தி அனுப்பி வைக்கிறார்கள்.

போக்குவரத்து நெரிசல்

இதனால் சாலைகளில் காலை நேரத்தில் வாகன போக்குவரத்து அதிகரித்து உள்ளது. பஸ், வேன் தவிர மற்ற அனைத்து வாகனங்களும் சாலைகளில் பயணிக்கின்றன.

நேற்று காலை 11 மணி அளவில் டவுன் மேலரதவீதியில் வழக்கமான நாட்கள் போல் மோட்டார் சைக்கிள்கள், ஆட்டோ, கார்கள், சரக்கு ஆட்டோக்கள் அணிவகுத்து சென்றன. இதனால் அவ்வப்போது மேலரதவீதி, வடக்கு ரதவீதி பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதைக்கண்ட போலீசார் வாகனங்களை ஒழுங்கு படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர்.

மேலும் அத்தியாவசிய தேவையின்றி வாகனங்களில் வெளியே வந்தவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது.

Next Story