நெல்லையில் சாவு எண்ணிக்கை அதிகரிப்பு: தகன மேடைகளில் வரிசையாக காத்து கிடக்கும் உடல்கள்


நெல்லையில் சாவு எண்ணிக்கை அதிகரிப்பு:  தகன மேடைகளில் வரிசையாக காத்து கிடக்கும் உடல்கள்
x
தினத்தந்தி 14 May 2021 12:43 AM IST (Updated: 14 May 2021 12:43 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் கொரோனா மற்றும் இயற்கை மரணங்கள் அதிகரித்து இருப்பதால் தகன மேடைகளில் எரிப்பதற்காக வரிசையாக உடல்கள் வைக்கப்பட்டுள்ளன.

நெல்லை:
நெல்லையில் கொரோனா மற்றும் இயற்கை மரணங்கள் அதிகரித்து இருப்பதால் தகன மேடைகளில் எரிப்பதற்காக வரிசையாக உடல்கள் வைக்கப்பட்டுள்ளன.

சாவு எண்ணிக்கை

நெல்லை மருத்துவ துறையில் 4 மாவட்டங்களில் தலைமை பகுதியாக அமைந்துள்ளது. இங்கு நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, குமரி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கிறார்கள்.
பழமை வாய்ந்த நெல்லை பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெற்று செல்கிறார்கள்.

இதே போல் தற்போது கொரோனா பெருந்தொற்று நோயால் ஆயிரக்கணக்கான நோயாளிகள் நெல்லையில் உள்ள ஆஸ்பத்திரிகளில் சேர்ந்து உள்ளனர். தற்போது கொரோனா நோயாலும், இயற்கையிலும் இறப்பு எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.

தகன மேடைகளில் காத்திருப்பு

இதில் கொரோனாவால் பலியானோர் உடல்கள் பெரும்பாலும் பாளையங்கோட்டை வி.எம்.சத்திரம் மற்றும் சந்திப்பு சிந்துபூந்துறையில் உள்ள மாநகராட்சி தகன மேடைகளில் எரிக்கப்படுகின்றன.
எஸ்.டி.பி.ஐ. கட்சி, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா கட்சியின் மருத்துவ அணியினர் மற்றும் தன்னார்வ அமைப்பினர் தங்களது ஆம்புலன்ஸ் வாகனங்களை கொரோனாவால் இறந்தோர் உடல்களை கொண்டு வந்து இந்த தகன மேடைகளில் சேர்க்கின்றனர். 

இதுதவிர பிற நோய்களாலும், இயற்கையாகவும் இறந்தவர்களின் உடல்களும் இங்கு தகனம் செய்ய கொண்டு வரப்படுகின்றன. ஒரு நாளைக்கு 40 உடல்கள் வரை எரிக்க கொண்டு வரப்படுகிறது.

இதனால் தகன மேடை வளாகம் உடல்களால் நிரம்பி கிடக்கின்றன. வரிசையாக அவை வைக்கப்பட்டு, டோக்கன் வழங்கப்பட்டு ஒவ்வொன்றாக எரிக்கப்படுகின்றன. 
கொரோனா நோயாளியின் உடல் என்பதால் சுற்றத்தார் எண்ணிக்கை குறைவாகவே உள்ளன. ஆனால் உடல்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதனால் எரிவாயு தகன மேடை, மின்சார தகன மேடைகள் 24 மணி நேரமும் உடல்களை எரிக்கும் பணியில் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன. 

Next Story