தினமும் 280 பேர் கொரோனாவால் பாதிப்பு தென்காசி கலெக்டர் சமீரன் தகவல்
தென்காசி மாவட்டத்தில் தினமும் 280 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு வருவதாக கலெக்டர் சமீரன் தெரிவித்தார்.
தென்காசி:
தென்காசி மாவட்டத்தில் தினமும் 280 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு வருவதாக கலெக்டர் சமீரன் தெரிவித்தார்.
ஆய்வுக்கூட்டம்
தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் சார்பில் கொரோனா வைரஸ் தடுப்பது குறித்து மேற்கொண்டுள்ள பணிகள் மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
மாவட்ட கலெக்டர் சமீரன், கொரோனா சிறப்பு அதிகாரி எஸ்.ஜே.சிரு ஆகியோர் தலைமை தாங்கினார்கள். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுகுணா சிங், வருவாய் அலுவலர் ஜனனி சவுந்தர்யா, ஊரக வளர்ச்சி திட்ட முகமை மாவட்ட திட்ட அலுவலர் சரவணன், சுகாதார பணிகள் இணை இயக்குனர் டாக்டர் நெடுமாறன், தென்காசி அரசு ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் டாக்டர் ஜெஸ்லின் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
தினமும் 280 பேர் பாதிப்பு
கூட்டத்திற்கு பிறகு கலெக்டர் சமீரன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி தென்காசி மாவட்டத்திற்கு சிறப்பு அதிகாரியாக சென்னை பெருநகர வளர்ச்சி கழக உறுப்பினர் செயலாளர் எஸ்.ஜே.சிரு நியமிக்கப்பட்டுள்ளார். அவர் கொரோனா பாதிப்பு குறித்த செயல்பாடுகள் மற்றும் அலுவலர்கள் மேற்கொண்டுள்ள செயல்பாடுகள். தற்போதைய ஆக்சிஜன் இருப்பு, தற்போதுள்ள கொரோனா நோயாளிகள் குறித்த கண்காணிப்பு குறித்தும், பேரிடர் மேலாண்மை துறையின் கீழ் செயல்படும் கோவிட்-19 ஒருங்கிணைந்த கட்டளை மையத்தின் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்கிறார்.
மேலும் தென்காசி தலைமை மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள திரவ ஆக்சிஜன் உற்பத்தி குறித்தும், கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வரும் கொரோனா சிறப்பு மையங்கள் மற்றும் கொரோனா பாதிக்கப்பட்ட கட்டுப்பாட்டு பகுதிகளையும் ஆய்வு மேற்கொள்ள உள்ளார். தென்காசி மாவட்டத்தை பொறுத்தவரை கொரோனா பாதிப்பானது நாள் ஒன்றுக்கு 280 நபர்கள் வீதம் பாதிக்கப்படுகிறார்கள். அதாவது இது 15.86 சதவீதம் ஆகும். அதில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவ ஆலோசனையின்படி வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை மேற்கொள்கிறார்கள்.
ஆக்சிஜன் இருப்பு
தற்போது தென்காசி தலைமை மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள திரவ ஆக்சிஜன் கிடங்கு சுமார் 1.5 கிலோ லிட்டர் கொள்ளளவு கொண்டது. அந்த கிட்டங்கியில் ஆக்சிஜன் 700 லிட்டர் முதல் 800 லிட்டர் வரை தேவைப்படுகிறது. எனவே தமிழ்நாடு மருத்துவ கார்ப்பரேஷன் மூலம் மறுசுழற்சி செய்யப்பட்டு தினமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
நேற்று இரவு 1.2 லிட்டர் திரவ ஆக்சிஜன் எடுக்கப்பட்டுள்ளது. இது நாளை மாலை வரை ஆக்சிஜன் வழங்க போதுமானதாக உள்ளது. மேலும் டி டைப் ஆக்சிஜன் சிலிண்டர் தற்போது கையிருப்பில் உள்ளது.
ஊரடங்கு நிலை
மேலும் தென்காசி மாவட்டத்தில் முழு ஊரடங்கு மாவட்ட நிர்வாகத்தின் கடுமையான நடவடிக்கையின் மூலம் முழு கட்டுக்கோப்புடன் பொதுமக்கள் ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதை தொடர்ந்து கொரோனா வைரஸை தடுப்பது குறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் கீழ் செயல்படும் கோவிட்- 19 ஒருங்கிணைந்த கட்டளை மையம், தலைமை மருத்துவமனையில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக பெண்கள் உள்நோயாளி பிரிவில் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ள படுக்கைவசதியுடன் கூடிய கொரோனா சிறப்பு மையம், திரவ ஆக்சிஜன் சேமிப்பு கிடங்கு, கொரோனா சிறப்பு சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு வழங்கப்படும் உணவு மற்றும் சிகிச்சை முறைகள் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
மேலும் புளியரை சோதனை சாவடியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், செங்கோட்டை நகராட்சி கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகள், நல்லமணி யாதவா கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா பாதுகாப்பு மையம் ஆகியவற்றையும் பார்வையிட்டு ஆய்வுசெய்தனர்.
Related Tags :
Next Story