முக்கிய இடங்களில் விபத்துகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்


முக்கிய இடங்களில் விபத்துகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
x
தினத்தந்தி 14 May 2021 1:27 AM IST (Updated: 14 May 2021 1:27 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூரில் முக்கிய இடங்களில் விபத்துகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர்.

பெரம்பலூர்:

தடுப்புகள் இல்லை
பெரம்பலூரில் காமராஜர் சிக்னல், விளாமுத்தூர் சாலை சந்திப்பில் உள்ள வெங்கடேசபுரம் சிக்னல் ஆகிய இரண்டு இடங்களும் அதிக அளவில் வாகனப்போக்குவரத்து மிகுந்த பகுதிகள் ஆகும். வெங்கடேசபுரம் சிக்னல் பகுதியில் புதிய பஸ் நிலையப்பகுதி, விளாமுத்தூர் சாலையில் இருந்து வரும் இருசக்கர மற்றும் இலகுரக, கனரக வாகனங்கள் ரோவர் சாலையை சென்றடைவதற்கு பயணிக்கும்போது ரோவர் சாலையின் தென்திசை முகப்பில் எதிர் எதிரே வரும் வாகனங்கள் குழப்பம் இன்றி ஒன்றையொன்று சரியாக கடந்து செல்வதற்கு சாலைைய பிரிக்கும் தடுப்புகள்(டிவைடர்கள்) இதுவரை அமைக்கப்படவில்லை.
இதேபோல் ரோவர் சாலையின் மற்றொரு முனை எளம்பலூர் பிரதான சாலையில் சென்று முடிகிறது. எளம்பலூர் பிரதான சாலை மற்றும் ரோவர் பிரதான சாலையில் எதிர்எதிர் திசையில் இருந்து வரும் வாகனங்கள் கடந்து செல்வதில் குழப்பங்கள் ஏற்படுவதால், சிலநேரங்களில் வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாகும் சூழல் இருந்து வருகிறது.
குழப்பமின்றி பயணிக்க...
இப்பகுதிகளில் வாகனங்களில் செல்வோர் தடுமாற்றம் இன்றி செல்வதற்கு வசதியாகவும், வாகனங்களின் டிரைவர்கள் குழப்பம் இன்றி அவரவர் பாதையில் கடந்து செல்வதற்கு வசதியாகவும் ரோவர் சாலையின் தென்பகுதியிலும், அதாவது விளாமுத்தூர் பிரிவு சாலை சிக்னலின் வடக்குபகுதியிலும், ரோவர் சாலை-எளம்பலூர் பிரதான சாலையுடன் சந்திக்கும் இடத்தில் ஸ்ரீராமகிருஷ்ணா பள்ளி அருகிலும், சாலை முகப்பு பகுதியிலும் தடுப்புகளை அமைத்து வாகன போக்குவரத்தில் குழப்பம் அடையாமல் பயணிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ரோவர் சாலை குடியிருப்பாளர்கள், நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொரோனா 2-வது அலை பரவலை கட்டுப்படுவதற்கான ஊரடங்கு கட்டுப்பாடுகள் வருகிற 24-ந்தேதியுடன் முடிவடைகிறது. அதற்குள் இந்த இரு இடங்களிலும் எதிர்எதிரே வரும் வாகனங்கள் ஒன்றையொன்று சரியாக கடந்து செல்வதற்கு சாலையை பிரிக்கும் தடுப்புகள் அமைத்து, வாகன விபத்துகள் ஏற்படாதவாறு முன்எச்சரிக்கை நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ளவேண்டும் என்று வாகன ஓட்டிகள், மக்கள் சக்தி இயக்கம், பெரம்பலூர் இளைஞர்கள் இயக்கம் உள்ளிட்ட தன்னார்வ அமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.

Next Story