கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும்


கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்  தீவிரப்படுத்தப்படும்
x
தினத்தந்தி 14 May 2021 1:43 AM IST (Updated: 14 May 2021 1:43 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் என அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.

விருதுநகர், 
விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் என அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.
 ஆய்வுக்கூட்டம்  
விருதுநகரில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் மற்றும் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் நேற்று கொரோனா தடுப்பு மற்றும் சிகிச்சை நடைமுறைகளை ஆய்வு செய்தனர்.
 விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கும் நடைமுறைகளை பார்வையிட்ட அமைச்சர்கள் அதன்பின்னர் இந்நகர் வி.வி.வி. பெண்கள் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்திற்கு சென்று அங்கு சிகிச்சை பெறுவோருக்கு வழங்கப்படும் உணவு மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளை கேட்டறிந்தனர்.
இதனை தொடர்ந்து கலெக்டர்அலுவலகத்தில் மருத்துவ அதிகாரிகளுடனும் மற்றும் பிற துறை அதிகாரிகளுடனும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
கொரோனா பாதிப்பு 
 இந்த கூட்டத்தில் கலெக்டர் கண்ணன் மற்றும் மாவட்ட கண்காணிப்பு அதிகாரி பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் சந்திரமோகன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெருமாள், மாவட்ட வருவாய் அதிகாரி மங்கள ராமசுப்பிரமணியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
 இதனை தொடர்ந்து அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- 
விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு குறித்து இதுவரை என்ன நடந்தது இனிமேல் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் என்ன என்பது பற்றி ஆய்வு மேற்கொண்டோம். இதில் இரண்டு பிரிவாக பிரித்து நடவடிக்கை மேற்கொள்ள முடிவு செய்தோம்.
ஆக்சிஜன் சிலிண்டர்
முதல்-அமைச்சரின் அறிவுரைப்படி மாவட்டத்தில் கொேரானா பாதிப்பை கட்டுப்படுத்தவும் உயிர் இழப்பை குறைப்பதற்கும் உரிய நடவடிக்கை எடுப்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
 ஆக்சிஜன் சிலிண்டர்கள் தற்போதைய நிலையில் மாவட்டத்தில் அரசு ஆஸ்பத்திரிகளுக்கு தினசரி 90 ஆக்சிஜன் சிலிண்டர்கள் தேவைப்படும் நிலையில் தற் போது 68 சிலிண்டர்கள் கையிருப்பில் உள்ளது. எனவே தேவையான ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
நடவடிக்கை 
 தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு தேவையானால் ஆக்சிஜன் சிலிண்டர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்டத்தில் தட்டுப்பாடில்லாமல் ஆக்சிஜன் சிலிண்டர் கிடைப்பதற்கு தொழில் துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நோய் தடுப்பூசி தேவையான அளவிற்கு கிடைக்க வாய்ப்புள்ளது.
 எனவே மாவட்டத்தில் அனைத்து தரப்பினரும் தடுப்பூசி போட முன்வர வேண்டும். தடுப்பூசி போட்டவர்களுக்கு தவறான குறுந்தகவல் அனுப்புவது தவிர்க்கப்படும். கொரோனா வார்டுகளில் வெளிநபர்கள் அனுமதிக்கப்படுவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். அதற்காக வார்டிற்கு வெளியே போலீசாரை பணியமர்த்த உத்தரவிடப்பட்டுள்ளது. தனியார் ஆஸ்பத்திரிகளில் கட்டணத்தை வரைமுறைப்படுத்த முதல்-அமைச்சரிடம் எடுத்துக்கூறி அதற்கான நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும்.
நியமனம்
மாவட்டத்தில் கொரோனா சிகிச்சைக்காக புதிதாக 33 டாக்டர்கள் மற்றும் 120 செவிலியர்கள் பணி அமர்த்தப்பட்டு இன்று நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது.
 கொரோனா நிவாரணம் முதல் தவணை ரூ. 2000 மாவட்டத்தில் 5 லட்சத்து 40 ஆயிரம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்கப்பட உள்ளது. தீவிர நடவடிக்கைகள் மூலம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைய வாய்ப்பு ஏற்படும் என நம்புகிறோம். மாவட்ட சுகாதாரத்துறையினர் நோய் பாதிப்பு பட்டியலை தினசரி வெளிப்படைத்தன்மையுடன் வெளியிட உரிய அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
வேண்டுகோள் 
பொதுமக்களும் தங்களை நோய்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ள அரசு அறிவித்துள்ள விதிமுறைகளை முறையாக பின்பற்றவும் ஊரடங்கு காலத்தில் விதிகளை முறையாக பின்பற்றி தேவையில்லாமல் வெளியே வருவதை தவிர்க்கவும் வேண்டுகிறேன்.
 பொதுமக்கள் ஒத்துழைப்பு மூலமே நாங்கள் எடுக்கும் நடவடிக்கைகள் பயன்தர வாய்ப்பு உள்ளதால் அனைவரும் மாவட்ட நிர்வாகம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டுகிறேன்.
 இவ்வாறு அவர் கூறினார். 
பேட்டியின்போது தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தனுஷ்குமார் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஏ.ஆர்.ஆர். சீனிவாசன்,  தங்கப்பாண்டியன், ஜி.அசோகன், ஆகியோர் உடனிருந்தனர்.

Next Story