சேலம் மாவட்டத்தில் உயிரிழப்புகளை தடுக்க 11 இடங்களில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய நடவடிக்கை கொரோனா தடுப்பு ஆய்வுக்கூட்டத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்


சேலம் மாவட்டத்தில் உயிரிழப்புகளை தடுக்க 11 இடங்களில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய நடவடிக்கை கொரோனா தடுப்பு ஆய்வுக்கூட்டத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்
x
தினத்தந்தி 14 May 2021 2:07 AM IST (Updated: 14 May 2021 2:07 AM IST)
t-max-icont-min-icon

சேலம் மாவட்டத்தில் கொரோனா நோயாளிகளின் உயிரிழப்புகளை தடுக்கும் வகையில் 11 இடங்களில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த ஆய்வுக்கூட்டத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

சேலம்:
சேலம் மாவட்டத்தில் கொரோனா நோயாளிகளின் உயிரிழப்புகளை தடுக்கும் வகையில் 11 இடங்களில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த ஆய்வுக்கூட்டத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.
ஆய்வுக்கூட்டம்
சேலம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் ராமன், எம்.பி.க்கள் எஸ்.ஆர்.பார்த்திபன், பொன் கவுதம சிகாமணி, சின்ராஜ், சேலம் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ. வக்கீல் ராஜேந்திரன், மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ்குமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா கனிக்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
இந்த கூட்டத்தில் தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி கலந்து கொண்டு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். 
பின்னர் கூட்டத்தில், அமைச்சர் செந்தில்பாலாஜி பேசியதாவது:-
சேலம் மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க வேண்டுமென்றால் முழு ஊரடங்கை தீவிரப்படுத்த வேண்டும். அந்தந்த பகுதிகளில் அவசர தேவைக்கு மட்டுமே பொதுமக்கள் வெளியே சென்று வர அனுமதிக்க வேண்டும். தேவையில்லாமல் சாலைகளில் சுற்றி வரும் வாகன ஓட்டிகளை போலீசார் திருப்பி அனுப்ப வேண்டும். 
4,234 படுக்கை வசதி
மாவட்டம் முழுவதும் 28 இடங்களில் சிகிச்சை மையங்கள் அமைத்து கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அங்கு 4 ஆயிரத்து 234 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. குறிப்பாக 5 மருத்துவமனைகளில் மட்டும் 1,531 படுக்கைகள் ஏற்படுத்தி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 
அதே நேரத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
11 இடங்களில் ஆக்சிஜன் உற்பத்தி
எனவே சேலம் மாவட்டத்தில் 11 இடங்களில் (மாடர்ன் ஆக்சிஜன் சிஸ்டம்) ஆக்சிஜன் உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 
இதில் ஒரு இடத்தில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜன் மூலம் 40 நோயாளிகளுக்கு ஆக்சிஜன் கிடைக்க வழிவகை செய்யப்படும். அப்படி பார்த்தால் தினமும் 440 கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வழங்க முடியும்.
இன்னும் 10 நாட்களில் இந்த பணிகள் முடிவடைந்து பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். ஆக்சிஜன் இல்லை என்று அரசு மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளை மருத்துவர்கள் திருப்பி அனுப்பக்கூடாது. முடிந்த அளவுக்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்க முன்வரவேண்டும். 
தமிழகத்தில் ஒரு உயிரிழப்பு கூட நடக்கக்கூடாது என்பதே முதல்-அமைச்சரின் உத்தரவாகும். அரசு மருத்துவமனைகள் மற்றும் சிறப்பு சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகளுக்கு தரமான உணவு வழங்குவதோடு அவர்களுக்கு தினமும் 3 வேளையும் முட்டைகள் வழங்கப்பட வேண்டும். சேலம் மாவட்டத்தில் முதலில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும். அதற்கு அதிகாரிகளும், பொதுமக்களும் என அனைவரும் இணைந்து பணியாற்றினால் தான் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியும். 
இவ்வாறு அமைச்சர்  செந்தில் பாலாஜி பேசினார்.
இந்த ஆய்வு கூட்டத்தில் அரசு ஆஸ்பத்திரி டீன் முருகேசன், கண்காணிப்பாளர் தனபால், மாவட்ட வருவாய் அலுவலர் திவாகர், மாநகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன், மாநகர் நல அலுவலர் பார்த்திபன், மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் செல்வகுமார் உள்பட அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Next Story