கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு தொடரும் உயிர் இழப்புகள் ஊரடங்கை கடுமையாக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு தொடரும் உயிர் இழப்புகள் ஊரடங்கை கடுமையாக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 14 May 2021 2:07 AM IST (Updated: 14 May 2021 2:07 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு தொடரும் உயிர் இழப்புகள் ஊரடங்கை கடுமையாக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு உயிர் இழப்புகள் தொடர்ந்து வருகின்றன. ஊரடங்கை கடுமையாக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்
 உயிர் இழப்பு
கொரோனா 2-வது அலை கிருஷ்ணகிரி மாவட்டத்தை புரட்டி போட்டு வருகிறது. கொரோனாவுக்கு கடந்த 1½ மாதத்தில் 10 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிர் இழப்புகளும் அதிகரித்துள்ளன. கிருஷ்ணகிரி கட்டிகானப்பள்ளியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற ரெயில்வே ஊழியர், அவரது மனைவி, அவர்களது 33 வயது மகன் ஆகிய 3 பேர் ஒரே நாளில் கொரோனாவுக்கு பலியானார்கள்.
அதே நாளில் ஓசூரில் போட்டோ ஸ்டூடியோ உரிமையாளர், அவரது மனைவியின் சகோதரர் ஒரே நாளில் பலியானார்கள். இந்த நிலையில் ஓசூரில் பாரதிதாசன் நகரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரிகள் 3 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். கடந்த 2-ந் தேதி ஒருவரும், நேற்று முன்தினம் மற்றொருவரும், நேற்று ஒருவரும் பலியாகி உள்ளனர்.
தனியார் நிறுவன ஊழியர்கள் பலி
இதே போல ஓசூரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் 15 நாளில் 11 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். மற்றொரு நிறுவனத்தில் இதுவரை 4 பேரும், மேலும் ஒரு நிறுவனத்தில் 5 பேரும் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.
உரிகம் வனப்பகுதியில் பணிபுரிந்து வந்த வன ஊழியர் நேற்று கொரோனா பாதிப்புக்கு பலியாகி உள்ளார். இவ்வாறு தொடர்ந்து உயிர் பலி ஏற்பட்டு வருவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஊரடங்கு கடுமையாக்கப்படுமா?
கொரோனாவால் பாதிக்கப்படும் மக்களுக்கு போதிய படுக்கை வசதிகள், ஆக்சிஜன் வசதிகளை செய்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தை பொறுத்தவரையில் ஊரடங்கு பெயரளவில் மட்டுமே உள்ளது. பகல் 12 மணி வரை பெரும்பாலான கடைகள் திறந்துள்ளன. மதியத்திற்கு மேல் அரசு அனுமதித்துள்ள கடைகளை தவிர மேலும் பல கடைகள் இயங்கி வருகின்றன.
அதேபோல  இருசக்கர வாகனங்களில் பொதுமக்கள் சென்ற வண்ணம் உள்ளனர். மேலும் இளைஞர்களும் சுற்றிய வண்ணம் உள்ளனர். இதனால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊரடங்கு உள்ளதா? என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது. எனவே ஊரடங்கு கடுமையாக்கப்பட்டால் மட்டுமே கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா கட்டுக்குள் வரும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

Next Story