மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடி- மின்னலுடன் பலத்த மழை
ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
கடும் வெயில்
ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கடந்த சில வாரங்களாக கடும் வெயில் வாட்டி எடுத்தது. வெளியில் நடமாட முடியாத அளவுக்கு அனல் காற்று வீசியது. இரவு நேரங்களில் வீடுகளின் உள்ளே படுக்க முடியாமல் பலர் வீட்டுக்கு வெளியே முற்றத்தில் படுத்து தூங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. எனவே மழை பெய்யாதா? வெயிலின் தாக்கம் குறையாதா? என பொதுமக்கள் ஏங்கினர்.
பொதுமக்களின் ஏக்கத்தை தவிர்க்கும் வகையில் நேற்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது.
கோபி- புஞ்சைபுளியம்பட்டி
கோபியில் நேற்று பகலில் வெயில் கொளுத்தியது. மாலை 5.30 மணி அளவில் வானில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்தன. பின்னர் 5.45 மணிக்கு இடி- மின்னலுடன் பலத்த மழை பெய்தது. சுமார் 20 நிமிட நேரம் இந்த மழை நீடித்தது. இதனால் தாழ்வான பகுதியில் மழைநீர் தேங்கி நின்றது.
புஞ்சைபுளியம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை 5 மணி அளவில் திடீரென மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை ஒரு மணி நேரம் நீடித்தது. இதனால் ரோட்டில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. பின்னர் குளிர்ந்த காற்று வீசியது.
நம்பியூர்- பெருந்துறை
நம்பியூர், கோசனம், நம்பியூர், பொலவபாளையம், எம்மாம்பூண்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மாலை 4 மணிக்கு காற்று மற்றும் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. காற்றால் நம்பியூரில் பல்வேறு பகுதிகளில் உள்ள மரங்களின் கிளைகள் முறிந்து விழுந்தன. எனினும் போக்குவரத்தில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.
பெருந்துறை பகுதியில் நேற்று மாலை திடீரென பலத்த மழை பெய்தது.
இதேபோல் பெருந்துறையை அடுத்த துடுப்பதி அருகே உள்ள ஓலைப்பாளையம் மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. இதனால் அங்குள்ள சமாதானபுரம் ரோட்டில் இருந்து ஓலைப்பாளையம் பிரிவு செல்லும் மண் ரோட்டில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதன்காரணமாக அந்த மண் ரோட்டில் அரிப்பு ஏற்பட்டது. பவானிசாகர் மற்றும் சுற்று வட்டார பகுதியில் நேற்று மாலை 4 மணி முதல் 6 மணி வரை பலத்த மழை பெய்தது.
கொடுமுடி
கொடுமுடி சுற்றுவட்டார பகுதிகளான பெரிய வட்டம், சோளக் காளிபாளையம், சாலைப்புதூர், ஒத்தக்கடை, தாமரை பாளையம், வெங்கம்பூர் ஆகிய பகுதிகளில் இடி-மின்னலுடன் மழை பெய்தது. இதனால் அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த இந்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். இந்த மழையானது கோடை உழவுக்கு ஏற்றதாக உள்ளது எனவும் விவசாயிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story