சேலத்தில் ரெம்டெசிவிர் மருந்துக்கான டோக்கன் வினியோகம் நிறுத்தம் 20-ந் தேதி மீண்டும் தொடக்கம்
சேலத்தில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனைக்கான டோக்கன் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது. மீண்டும் 20-ந் தேதி தொடங்கும் என்று மருத்துவத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
சேலம்:
சேலத்தில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனைக்கான டோக்கன் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது. மீண்டும் 20-ந் தேதி தொடங்கும் என்று மருத்துவத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மருந்துக்கு தட்டுப்பாடு
தமிழகத்தில் கொரோனா வைரஸ் 2-ம் அலை மிகவும் அதிகரித்து வருகிறது. கொரோனோ வைரஸ் தொற்று பாதித்தவர்களுக்கு உயிர்காக்கும் மருந்தாக ரெம்டெசிவிர் செலுத்தப்படுகிறது. இந்த மருந்துக்கு நாடு முழுவதும் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் இந்த மருந்தை விற்பனை செய்ய தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு அனுமதி வழங்கவில்லை. இதையொட்டி முதல் கட்டமாக சென்னையில் இந்த மருந்து அரசு சார்பில் விற்பனை செய்யப்பட்டது.
சேலத்தில் விற்பனை
தற்போது சேலம், கோவை, திருச்சி உள்ளிட்ட இடங்களில் அரசு சார்பில் விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி சேலம் இரும்பாலையில் உள்ள அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி வளாகத்தில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை கடந்த 8-ந் தேதி தொடங்கியது.
இந்த மருந்தை வாங்க சேலம், தர்மபுரி, நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமானவர்கள் கடந்த 7-ந் தேதி இரவே கல்லூரி வளாகத்தில் குவிந்தனர். இதையொட்டி முதல் நாள் 500 மருந்து பாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டன.
டோக்கன் வழங்குவது நிறுத்தம்
கூட்டம் அதிகமாக இருந்ததால் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தேதியில் மருந்து வாங்கிக் கொள்ள டோக்கன் வினியோகம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி சேலத்தில் வருகிற 21-ந்தேதி வரை மருந்து வழங்குவதற்கான டோக்கன்கள் ஏற்கனவே வழங்கப்பட்டு விட்டன.
தொடர்ந்து டோக்கன் வழங்கினால் பொதுமக்கள் அதிக அளவில் கூடுவார்கள் என்றும் சமூக இடைவெளியை கடைபிடிப்பது சிரமம் என்பதை கருத்தில் கொண்டும் மருந்து விற்பனைக்கான டோக்கன் வழங்குவது நிறுத்தப்பட்டது.
மீண்டும் தொடங்கப்படும்
இதுகுறித்து மருத்துவத் துறை அதிகாரிகள் கூறும்போது. சேலத்தில் தினமும் 300 பேருக்கு மருந்து விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி 21-ந் தேதி வரை மருந்து வழங்குவதற்கான டோக்கன் ஏற்கனவே வழங்கப்பட்டு விட்டது. 22-ந் தேதி மருந்து வாங்குவதற்கான டோக்கன் வினியோகம் வருகிற 20-ந் தேதி மீண்டும் தொடங்கப்படும். சேலத்தில் இதுவரை 1700 பேருக்கு ரெம்டெசிவிர் மருந்துகள் வழங்கப்பட்டு உள்ளன என்று கூறினர்.
Related Tags :
Next Story