சேலம் மாவட்டத்தில், 3 இடங்களில் 3,200 மதுபாட்டில்கள் பறிமுதல்; 3 பேர் கைது


சேலம் மாவட்டத்தில், 3 இடங்களில் 3,200 மதுபாட்டில்கள் பறிமுதல்; 3 பேர் கைது
x
தினத்தந்தி 14 May 2021 2:26 AM IST (Updated: 14 May 2021 2:26 AM IST)
t-max-icont-min-icon

சேலம் மாவட்டத்தில் 3 இடங்களில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 3,200 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

பனமரத்துப்பட்டி:
சேலம் மாவட்டத்தில் 3 இடங்களில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 3,200 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
மதுபாட்டில்கள் பதுக்கல்
தமிழகம் முழுவதும் கடந்த 10-ந் தேதி முதல் கொரோனா காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இந்த நிலையில் சேலம் மாவட்டம் மல்லூர் பகுதியில் கள்ளத்தனமாக மது விற்பனை செய்வதற்காக மதுபாட்டில்களை பதுக்கி வைத்துள்ளதாக மல்லூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதுதொடர்பாக மல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ், சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். 
அப்போது பாலம்பட்டி பகுதியில் ஜெயவேல் மகன் ரமேஷ் (வயது 35) என்பவர் மதுபாட்டில்களை மொத்தமாக வாங்கி பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரிடம் இருந்து 720 குவார்ட்டர் பாட்டில்கள், 180 பீர் பாட்டில்கள் என 900 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இந்த மதுபாட்டில்களின் மதிப்பு ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் ஆகும். இதையடுத்து மதுபாட்டில்களை கள்ளத்தனமாக விற்பனை செய்வதற்கு பதுக்கி வைத்திருந்ததாக வழக்குப்பதிவு செய்து ரமேஷை போலீசார் கைது செய்தனர்.
கெங்கவல்லி
கெங்கவல்லி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் நேற்று ரோந்து மேற்கொண்டனர். அப்போது இந்திரா காலனி பகுதியில் அனுமதியின்றி மது பானத்தை வீட்டில் பதுக்கி வைத்திருப்பதாக தகவல் கிடைத்ததும், பிரபு (33) என்பவரின் வீட்டுக்கு சென்று சோதனை நடத்தினர். 
அங்கு 50 மது பாட்டில்களை பதுக்கி விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து பிரபுவை கைது செய்த போலீசார், 50 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
போலீசார் சோதனை
தலைவாசல் அருகே புத்தூர் மேற்கு காட்டுப்பகுதியில் மது பாட்டில்களை அனுமதியின்றி பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில், தலைவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜ் தலைமையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் கோபால், மூர்த்தி, சிவகுருநாதன், மற்றும் போலீசார் அங்கு சென்றனர். 
அப்போது புத்தூர் மேற்கு காட்டுக்கொட்டாய் பகுதிகளில் விவசாயி பெரியசாமி தோட்டத்தில் உள்ள வீட்டில் 2 ஆயிரத்து 250 மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருந்ததை போலீசார் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். இந்த மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்தது, நாவக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த சிவலிங்கம் (வயது 45) என்பது தெரியவந்தது. 
இது தொடர்பாக தலைவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜ் வழக்குப்பதிவு செய்து சிவலிங்கத்தை கைது செய்தார். ஒரே இடத்தில் 2 ஆயிரத்து 250 மதுபாட்டில் பறிமுதல்  செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதன் மதிப்பு சுமார் ரூ.4 லட்சம் ஆகும். 

Next Story