ஈரோடு மாநகராட்சியில் கட்டப்பட்டு உள்ள குடிசை மாற்று வாரிய வீடுகளை இலவசமாக வழங்க வேண்டும்; அமைச்சர் சு.முத்துசாமியிடம் அ.தி.மு.க. பகுதி செயலாளர் கோரிக்கை
ஈரோடு மாநகராட்சியில் கட்டப்பட்டு உள்ள குடிசை மாற்று வாரிய வீடுகளை பயனாளிகளுக்கு இலவசமாக வழங்க வேண்டும் என்று அமைச்சர் சு.முத்துசாமியிடம் அ.தி.மு.க. பகுதி செயலாளர் ரா.மனோகரன் கோரிக்கை விடுத்தார்.
ஈரோடு
ஈரோடு மாநகராட்சியில் கட்டப்பட்டு உள்ள குடிசை மாற்று வாரிய வீடுகளை பயனாளிகளுக்கு இலவசமாக வழங்க வேண்டும் என்று அமைச்சர் சு.முத்துசாமியிடம் அ.தி.மு.க. பகுதி செயலாளர் ரா.மனோகரன் கோரிக்கை விடுத்தார்.
1,072 வீடுகள்
தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சராக ஈரோடு மேற்கு சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளர் சு.முத்துசாமி பதவி ஏற்று உள்ளார். நேற்று முன்தினம் ஈரோடு வந்த அவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
இந்தநிலையில் ஈரோடு பெரியார்நகர் பகுதி அ.தி.மு.க. செயலாளர் ரா.மனோகரன் நேற்று அமைச்சர் சு.முத்துசாமியை பெரியார் நகரில் உள்ள அவரது முகாம் அலுவலகத்தில் சந்தித்தார். அப்போது ஒரு கோரிக்கை மனுவை அவர் வழங்கினார். அதில், ஈரோடு மாநகராட்சியில் உள்ள பெரியார் நகர், புதுமைக்காலனி, கருங்கல்பாளையம் பகுதிகளில் 1,072 வீடுகள் அடுக்குமாடி குடியிருப்புகளாக கட்டப்பட்டு உள்ளது.
இலவசம்
இந்த வீடுகள் அங்கு ஏற்கனவே குடியிருந்த மக்களுக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. கட்டுமான பணிகள் முடிந்தபின்னர், வீடுகள் ஒதுக்கீடு பெற்றவர்கள் தலா ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் செலுத்த வேண்டும் என்று அரசு அறிவித்தது. அதைத்தொடர்ந்து முன்னாள் எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை வைக்கப்பட்டது. அதன்பேரில் தலா ரூ.1 லட்சம் செலுத்த வேண்டும் என்று அரசு தரப்பில் கூறப்பட்டது. ஆனால் கொரோனா பாதிப்பு காரணமாக இந்த மக்கள் வாழ்வாதாரத்துக்கே சிரமப்படும் வேளையில் ரூ.1 லட்சம் செலுத்துவது மிகவும் சிரமாகும்.
எனவே பயனாளிகள் அனைவருக்கும் ஒதுக்கப்பட்ட வீடுகளை இலவசமாக வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இதுபோல் அசோகபுரி, மணல்மேடு, குயவன்திட்டு, பழைய பூந்துறை ரோடு, பொய்யேரிக்கரை ஆகிய பகுதிகளில் ஓடையோரங்களில் வசித்து வரும் மக்கள் அதே பகுதியில் தொடர்ந்து வசிக்கவும் அனுமதிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த கோரிக்கை மனுவில் கூறப்பட்டு இருந்தது.
இந்த சந்திப்பின்போது சண்முகம், கதிர்வேல், சபாபதி, ராஜ், பாலதண்டாயுதம் ஆகியோர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story