இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஈரோடு மாவட்டத்தில் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுபவர்களுக்கு இலவச உணவு
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஈரோடு மாவட்டத்தில் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு இலவசமாக உணவு வழங்கப்படுகிறது
ஈரோடு
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஈரோடு மாவட்டத்தில் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு இலவசமாக உணவு வழங்கப்படுகிறது
முன்கள பணியாளர்கள்
ஈரோடு மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற 27 கோவில்களில் அன்னதான திட்டம் நடைபெற்று வருகிறது. இதன் மூலம் ஏழை, எளிய மக்கள் பயனடைந்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் தீவிரமாக உள்ளதால், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள அன்னதான திட்டம் நடைபெற்று வரும் கோவில்கள் மூலம், அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் நோயாளிகள், உதவியாளர்கள் மற்றும் முன் களப்பணியாளர்கள் பயனடையும் வகையில் ஒரு லட்சம் உணவு பொட்டலங்கள் வழங்க உத்தரவிடப்பட்டு உள்ளது.
அதன்படி, ஈரோடு மண்டலத்திற்கு உட்பட்ட ஈரோடு மாவட்டத்தில் 3 ஆயிரம் உணவு பொட்டலங்களும், நாமக்கல் மாவட்டத்தில் 2 ஆயிரம் உணவு பொட்டலங்களும் வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதில், ஈரோடு மாவட்டத்தில், அன்னதான திட்டம் நடைபெறும் கோவில்கள் மூலம், பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு 600 உணவு பொட்டலங்கள், ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு 700 உணவு பொட்டலங்கள், பவானி அரசு ஆஸ்பத்திரிக்கு 200 உணவு பொட்டலங்கள், சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு 250 உணவு பொட்டலங்கள், கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு 225 உணவு பொட்டலங்கள், அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு 100 உணவு பொட்டலங்கள் தினசரி வழங்கப்பட்டு வருகிறது.
அன்னதான திட்டம்
இந்த நிலையில் ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு வழங்கப்படும் உணவு மற்றும் ஈரோடு கோவில்களில் ஏழை, எளிய மக்களுக்கு வழங்கப்படும் உணவு தயாரிக்கும் பணி கொங்கலம்மன் கோவில் அன்னதான கூடத்தில் நடைபெற்றது. இந்த பணியை இந்து சமய அறநிலையத்துறை ஈரோடு மண்டல இணை ஆணையாளர் மங்கையர்கரசி நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஈரோடு மாவட்டத்தில் அன்னதான திட்டம் நடைபெற்று வரும் 27 கோவில்கள் மூடப்பட்டு இருந்தாலும், வழக்கம்போல் அனைத்து கோவில்களிலும் ஏழை, எளிய மக்களுக்கு உணவு வழங்கப்படுகிறது. மொத்தம் 950 பேர் பயனடைந்து வருகின்றனர். ஈரோடு மாநகரை பொருத்தவரை கொரோனா பரவல் அதிகமாக உள்ளதால், சம்பந்தப்பட்ட கோவில்களில் வைத்து உணவு பொட்டலங்களை வழங்காமல், ஈரோடு வ.உ.சி. பூங்காவில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் வைத்து ஏழை, எளிய மக்களுக்கு உணவு வழங்கப்படுகிறது.
உணவு பொட்டலங்கள்
அதேபோல் கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வரும் அரசு ஆஸ்பத்திரிகளுக்கு, அந்தந்த பகுதியில் உள்ள கோவில்களில் உணவு பொட்டலங்கள் தயார் செய்து வழங்கப்படுகிறது. இதில் ஈரோடு மாவட்டத்திற்கு வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ள 3 ஆயிரம் உணவு பொட்டலங்களில், 27 கோவில்கள் வழங்கப்பட்டு வரும் 950 உணவு பொட்டலங்கள் போக, மீதம் உள்ள 2050 உணவு பொட்டலங்கள், சம்பந்தப்பட்ட அரசு ஆஸ்பத்திரி நிர்வாகத்திடம் இருந்து பெறப்பட்ட தேவையான பயனாளிகளின் பட்டியல் படி, உணவு பொட்டலங்கள் பிரித்து வழங்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின்போது, ஈரோடு மாவட்ட உதவி ஆணையாளர் அன்னக்கொடி, பெரிய மாரியம்மன் கோவில் செயல் அலுவலர் ரமணி காந்தன் ஆகியோர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story