ஊரடங்கு நடக்கிறதா? இல்லையா? ஈரோட்டில் கட்டுப்பாடு இல்லாமல் சென்ற வாகனங்கள்; கொரோனா நோயாளி என்று போலீசாரை அச்சுறுத்தும் வாகன ஓட்டிகள்


ஊரடங்கு நடக்கிறதா? இல்லையா? ஈரோட்டில் கட்டுப்பாடு இல்லாமல்  சென்ற வாகனங்கள்; கொரோனா நோயாளி என்று போலீசாரை அச்சுறுத்தும் வாகன ஓட்டிகள்
x
தினத்தந்தி 14 May 2021 2:47 AM IST (Updated: 14 May 2021 2:47 AM IST)
t-max-icont-min-icon

ஈரோட்டில் நேற்று ஊரடங்கு நடக்கிறதா? இல்லையா? என்ற கேள்வி எழும் அளவுக்கு வாகனங்கள் கட்டுப்பாடு இல்லாமல் ஓடின. வாகனங்களை சோதனை செய்ய செல்லும் போலீசாரிடம் கொரோனா நோயாளி என்று அச்சுறுத்தும் வகையில் வாகன ஓட்டிகள் பதில் அளித்து செல்கிறார்கள்.

ஈரோடு
ஈரோட்டில் நேற்று ஊரடங்கு நடக்கிறதா? இல்லையா? என்ற கேள்வி எழும் அளவுக்கு வாகனங்கள் கட்டுப்பாடு இல்லாமல் ஓடின. வாகனங்களை சோதனை செய்ய செல்லும் போலீசாரிடம் கொரோனா நோயாளி என்று அச்சுறுத்தும் வகையில் வாகன ஓட்டிகள் பதில் அளித்து செல்கிறார்கள்.
முழு ஊரடங்கு
தமிழ்நாட்டில் கடந்த 10-ந் தேதியில் இருந்து முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. முழு ஊரடங்காக இருந்தாலும் பொதுமக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக காய்கறி, மளிகைக்கடைகள், மருந்து கடைகள் மற்றும் பால் கடைகள் திறந்து இருக்கவும் அதற்கு பொதுமக்கள் சென்று வரவும் அனுமதிக்கப்பட்டு உள்ளது.
கடந்த 3 நாட்களாக இந்த நடைமுறையை பொதுமக்கள் ஓரளவு கடைபிடித்ததாக தெரிந்தது. ஆனால் நேற்று காலையில் இருந்தே வாகன ஓட்டிகள் கட்டுப்பாடு இன்றி சாலைகளில் சுற்றிக்கொண்டு இருந்தனர். ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் போக்குவரத்தை தடுக்கும் பணியில் இருந்த போலீசார் போக்குவரத்தை சீரமைக்கும் அளவுக்கு வாகன நெரிசல் இருந்தது.
அச்சுறுத்தல்
போலீசார் விசாரித்தால் ஏ.டி.எம். போகிறேன், மருந்து வாங்க போகிறேன் என்று ஏதேனும் சாக்குப்போக்கு சொல்லிவிட்டு போலீசாரை ஏமாற்றிவிட்டோம் என்று வெற்றிக்களிப்புடன் பலரும் சென்றனர். ஆண்கள் மட்டுமின்றி பெண்களும் இதுபோன்று வாகனங்களில் சுற்றிக்கொண்டு இருந்தனர்.
கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிளில் சென்ற சிலரிடம் போலீசார் தடுத்து நிறுத்தி விசாரிக்க முயன்றபோது நான் கொரோனா நோயாளி அருகில் வராதீர்கள் என்று சிலர் அச்சுறுத்தும் வகையில் சொல்லிக்கொண்டு சென்றார்கள். சிலர் கொரோனா பரிசோதனைக்கு சென்று விட்டு வருகிறேன் என்றும் கூறினார்கள். இதுபோன்று அவர்கள் போலீசாரை ஏமாற்றிவிட்டு செல்வதால் போக்குவரத்து அதிகமாவதுடன் கொரோனா பரவலும் அதிகரிக்கும்.
சமூக அக்கறை
ஏற்கனவே கடந்த 2 நாட்களாக ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஏறக்குறைய 1000 என்ற எண்ணிக்கையை தொட்டு விட்டது. 
ஆஸ்பத்திரிகளில் படுக்கை இல்லை. மருந்துகள் தட்டுப்பாடு என்ற செய்திகள் எல்லாம் வெளிவந்த பிறகும் கொஞ்சம் கூட சமூக அக்கறை இன்றி சுற்றி வருபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அத்தியாவசியமின்றி சுற்றுபவர்களால், உண்மையிலேயே அவசர தேவைகளுக்காக செல்ல வேண்டியவர்கள்தான் முழுமையாக பாதிக்கப்படுகிறார்கள்.
எனவே ஈரோடு மாவட்ட கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் முழுமையாக இதுதொடர்பான நடவடிக்கை எடுத்து ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தொற்று இல்லாத நிலையை ஏற்படுத்த வேண்டும்.  தொழில் நகரமாக விளங்கும் ஈரோட்டில் கடந்த ஒரு  மாதமாக தொழில் முற்றிலும் இல்லாத நிலை ஏற்பட்டு உள்ளது. பல ஆயிரம் கோடி ரூபாய் உற்பத்தி பாதிப்பு, உற்பத்தி இழப்பு மற்றும் வருவாய் இழப்பு ஏற்பட்டு இருக்கும் இந்த நிலையில் அனைத்து தரப்பினரும் அரசின் கட்டுப்பாடுகளை உணர்ந்து, தேவைக்கு மட்டும் தளர்வுகளை பயன்படுத்த வேண்டும். கொரோனா பரவலை கட்டுப்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

Next Story