பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை ரத்து


பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை ரத்து
x
தினத்தந்தி 14 May 2021 6:37 AM IST (Updated: 14 May 2021 6:39 AM IST)
t-max-icont-min-icon

ரம்ஜான் பண்டிகையையொட்டி பள்ளிவாசல்களில் நடைபெறும் சிறப்பு தொழுகை ரத்து செய்யப்பட்டு உள்ளது.

கூடலூர்,

ரம்ஜான் பண்டிகையையொட்டி பள்ளிவாசல்களில் நடைபெறும் சிறப்பு தொழுகை ரத்து செய்யப்பட்டு உள்ளது.

ரம்ஜான் பண்டிகை

ரமலான் மாதத்தில் நோன்பு இருத்தல், புனித பயணம் மேற்கொள்தல், தினமும் 5 முறை தொழுதல், ஏழைகளுக்கு தானம் செய்தல், ஒரே கடவுள் என்பதை கடைபிடித்தல் ஆகிய 5 கடமைகளை முஸ்லிம்கள் பின்பற்ற வேண்டும் என இஸ்லாம் வலியுறுத்துகிறது. 

இதை முஸ்லிம்கள் பின்பற்றி வருகின்றனர். கடந்த மாதம் 13-ந் தேதி ரமலான் மாதம் தொடங்கியது. இதைத்தொடர்ந்து முஸ்லிம்கள் நோன்பு தொடங்கினர். நேற்று முன்தினம் வானில் பிறை தெரிந்தது. இதனால் கேரள மாநிலம் மற்றும் அதன் கரையோரம் உள்ள கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் ரம்ஜான் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது.

வீடுகளில் தொழுகை

ஆனால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்ததால் வழிபாட்டுத்தலங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இதனால் கூடலூர், பந்தலூர் தாலுகாக்கள் மசினகுடி, நடுவட்டம் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகைகள் ரத்து செய்யப்பட்டு இருந்தது. 

இதனால் பள்ளிவாசல்கள் வெறிச்சோடி காணப்பட்டது. முஸ்லிம்கள் தங்களது வீடுகளில் குடும்பத்தினருடன் தொழுகை நடத்தி எளிமையான முறையில் ரம்ஜான் பண்டிகையை கொண்டாடினர். பின்னர் செல்போன்கள் மற்றும் சமூக வலைதளங்கள் மூலம் தங்களது நண்பர்கள், உறவினர்களுக்கு வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.

எளிமையாக...

இதுகுறித்து முஸ்லிம்கள் கூறியதாவது:- கடந்த ஆண்டும் கொரோனா தடுப்பு ஊரடங்கு காலத்தில் ரமலான் மாதம் கடைபிடிக்கப்பட்டது. இந்த ஆண்டில் தளர்வுகள் அளிக்கப்பட்டு இருந்ததால் நோன்பு காலத்தில் பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. 

ஆனால் கடந்த 10-ந் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடைபெறவில்லை. அதற்கு பதிலாக வீடுகளில் எளிமையாக பண்டிகை கொண்டாடப்பட்டது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story