கடலூர் மாவட்டத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த குழுக்கள் அமைப்பு அமைச்சர் எம். ஆர்.கே. பன்னீர்செல்வம் தகவல்


கடலூர் மாவட்டத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த குழுக்கள் அமைப்பு அமைச்சர் எம். ஆர்.கே. பன்னீர்செல்வம் தகவல்
x
தினத்தந்தி 14 May 2021 10:01 PM IST (Updated: 14 May 2021 10:01 PM IST)
t-max-icont-min-icon

கடலூர் மாவட்டத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த குழுக்கள் அமைக்கப்பட்டு வருவதாக அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கூறினார்.

கடலூர், 

ஆய்வுக்கூட்டம்

கடலூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து கலெக்டர் அலுவலகத்தில் அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு அமைச்சர்கள் எம்.ஆர். கே. பன்னீர்செல்வம், சி.வி. கணேசன் ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சந்திரகாந்த் பி.காம்பிளே, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஶ்ரீஅபிநவ், மாவட்ட வருவாய் அலுவலர் அருண் சத்யா, ரமேஷ் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் சபா. ராஜேந்திரன், வேல்முருகன், ராதாகிருஷ்ணன், சிந்தனைச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சி.வி.கணேசன் ஆகியோர் பேசியதாவது:-

ஆலோசனை

கொரோனா அதிகமாக பரவி வரும் நிலையில் பொதுமக்கள் அத்தியாவசிய தேவை இன்றி வெளியே வருவதை தவிர்க்க வேண்டும். நோய்த் தொற்று அறிகுறி தென்பட்டால் பரிசோதனை செய்து கொண்டு, டாக்டர்களின் ஆலோசனையை ஏற்று சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.
கடலூர் அரசு மருத்துவமனை, சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் கூடுதலாக ஆக்சிஜன் படுக்கை வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஒரே பகுதியில் 3 பேருக்கு மேல் கொரோனா ஏற்பட்டால் அந்த பகுதியை தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்து அரசு அறிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும். பின்பற்றாத நபர்களுக்கு அபராதம் விதிப்பதை தீவிரமாக கடைபிடிக்க வேண்டும்.

தடுப்பூசி

மாவட்டத்தில் இதுவரை 1 லட்சத்து 63 ஆயிரத்து 8 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தொடர்ந்து தடுப்பூசி போடுவதற்கு பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மாவட்டத்தில் மருத்துவத்துறை, காவல்துறை, வருவாய்த்துறை, உள்ளாட்சித் துறை ஆகிய துறைகள் இணைந்து செயல்பட்டு கொரோனாவை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த பேரிடர் காலத்தில் பணியாற்றிவரும் டாக்டர்களுக்கு பாராட்டு தெரிவித்துக் கொள்கிறோம். தொடர்ந்து அனைவரும் இணைந்து நோய்த்தொற்று இல்லாத மாவட்டமாக கொண்டுவர பாடுபடவேண்டும்.
இவ்வாறு அமைச்சர்கள் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், சி.வி. கணேசன் ஆகியோர் தெரிவித்தனர். தொடர்ந்து கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு மையத்தை அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

குழுக்கள் அமைப்பு

முன்னதாக அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கூறுகையில், கடலூர் மாவட்டத்தில் கிராம, ஊராட்சி, வட்ட, கோட்ட அளவில் குழுக்கள் அமைத்து கொரோனா பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஒரே நாளில் 672 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். இதை கட்டுப்படுத்தி மாவட்டத்தில் நோய் தொற்று இல்லை என்ற நிலைமைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுப்போம். இந்த ஆட்சி பொறுப்பேற்றபோது ஆக்சிஜன் பற்றாக்குறை இருந்தது. 
தற்போது ஆக்சிஜன் இல்லை என்ற நிலை இல்லை. சிதம்பரம், கடலூரில் ஆக்சிஜன் உற்பத்தி பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது. இந்த பணிகள் 3 வாரங்களில் முடிவடைந்து நமக்கு ஆக்சிஜன் கிடைக்கும். கடலூர் மாவட்டத்திற்கு 10 கிலோ லிட்டர் ஆக்சிஜன் தேவை. தற்போது 7 கிலோ லிட்டர் ஆக்சிஜன் நமக்கு உள்ளது. கூடுதலாக ஆக்சிஜன் தேவை என்று முதல் -அமைச்சரிடம் கேட்டிருக்கிறோம். அதேபோல் ரத்தம் பரிசோதனை செய்வதற்கான கருவிகள் நம்மிடம் இல்லை.

கருவிகள் வாங்கப்படும்

இதனால் தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பி பரிசோதனைகள் செய்து வந்தோம். தற்போது ரத்தபரிசோதனை செய்யும் கருவிகள் வாங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றார்.
கூட்டத்தில் ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் மகேந்திரன், சிதம்பரம் சப் -கலெக்டர் மதுபாலன், நலப்பணிகள் இணை இயக்குனர் ரமேஷ் பாபு, சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் செந்தில்குமார், கோட்டாட்சியர் ஜெகதீஸ்வரன், அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் சாய்லீலா, சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கண்காணிப்பாளர் நிர்மலாதேவி மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story