ஒரே நாளில் 4 பேர் பலி
ராமநாதபுரத்தில் கொரோனா நோயாளிகள் இறப்பு அதிகரித்து வருகிறது. ஒரே நாளில் 4 பேர் பலியானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
ராமநாதபுரம்,
ராமநாதபுரத்தில் கொரோனா நோயாளிகள் இறப்பு அதிகரித்து வருகிறது. ஒரே நாளில் 4 பேர் பலியானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கொரோனா
ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப் பட்டவர்கள் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இவ்வாறு ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளி களில் பலர் தொடர்ந்து பலியாகி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நாள்தோறும் 3 முதல் 10 வரையிலான நோயாளிகள் இறந்து வருகின்றனர். நேற்று முன்தினம் மட்டும் 4 பேர் பலியாகி அவர்களின் உடல்கள் ஆஸ்பத்திரியில் இருந்து கொண்டு செல்லப்பட்டுள்ளன. இவர்களில் 2 ஆண்கள், 2 பெண்கள் அடங்குவர்.
இந்த 4 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதேபோன்று நாள்தோறும் பலர் பலியாவதும், அவர்களில் பாதிபேருக்கு மட்டுமே தொற்று உள்ளதாகவும் கூறுகின்றனர். ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் இவ்வாறு அதிகம் பேர் பலியாகி வருவது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அதிகரிப்பு
இதுகுறித்து ஆஸ்பத்திரி நிர்வாகத்திடம் கேட்டபோது, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதும் அறிகுறி தென்பட்ட உடனேயே வந்துவிட்டால் உடனடியாக காப்பாற்றி விடலாம். ஆனால், பலர் அச்சம் காரணமாகவும், ஆஸ்பத்திரிக்கு வர தயங்கியும் தாங்களாகவே சுய சிகிச்சை எடுத்துக்கொண்டு தொற்று கிருமி நுரையீரலுக்கு சென்றபின்னர்தான் வருகின்றனர். அதுபோன்றவர்களை காப்பாற்ற முடிவதில்லை. இதுதவிர, தனியார் ஆஸ்பத்திரிகளில் கைவிரித்த பின்னர் வேறு வழியின்றி அரசு ஆஸ்பத்திரிக்கு வருகின்றனர். இங்கு வந்ததும் ஒரு சில மணி நேரங்களில் இறந்துவிடுகின்றனர். இவ்வாறு அவர் கூறினர்.
இது ஒருபுறமிருக்க அரசு ஆஸ்பத்திரிகளை விட தனியார் ஆஸ்பத்திரிகளில் கொரோனா தொற்றால் பலியாகும் நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்த இறப்பு விவரத்தை தனியார் ஆஸ்பத்திரி நிர்வாகத்தினர் மறைத்து வருகின்றனர். கடந்த ஓரிரு நாட்களுக்கு முன்னர் ராமநாதபுரம் தனியார் ஆஸ்பத்திரி ஒன்றில் ஒரே நாளில் 6 பேர் வரை பலியானதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இந்த உடல்கள் முறைப்படி அடக்கம் செய்யப்படுவதில்லை. தகவலும் வெளியிடுவதில்லை.
விசாரணை
தங்களின் ஆஸ்பத்திரிக்கு கொரோனா நோயாளிகள் வருகை குறைந்துவிடும் என்பதால் மருத்துவ ரீதியான வேறு காரணங்களை கூறி அனுப்பி வைத்து விடுகின்றனர். இதுபோன்ற விபரீத செயல் ராமநாதபுரத்தில் நடந்து வருவது வேதனை அளிப்பதாக உள்ளது. இதுகுறித்து சுகாதாரத்துறையினர் உரிய விசாரணை நடத்தி தினமும் பலியானவர்களின் எண்ணிக்கையை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
Related Tags :
Next Story