ஆக்சிஜன் உற்பத்தி செய்ய முன்வருபவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் அதிகாரிகளுக்கு, அமைச்சர் பொன்முடி உத்தரவு
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய முன்வருபவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என அமைச்சர் பொன்முடி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
கள்ளக்குறிச்சி
ஆய்வு கூட்டம்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்று நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதற்கு உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தலைமை தாங்கினார். கலெக்டர் கிரண்குராலா, போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக், பொன்.கவுதமசிகாமணி எம்.பி, சட்டமன்ற உறுப்பினர்கள் உதயசூரியன், மணிக்கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் அமைச்சர் பொன்முடி பேசியதாவது:-
விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்
தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே சுகாதாரத்துறை, நகராட்சி, பேரூராட்சி, ஊரக வளர்ச்சித்துறை, வருவாய்த்துறையை சேர்ந்த அலுவலர்கள், பணியாளர்கள் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும்போது முதலில் உங்களை நீங்கள் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். ஏதோ கடமைக்காக பணி செய்யாமல் அர்ப்பணிப்போடு செயல்படவேண்டும்.
பொதுமக்களிடத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் அதன் அறிகுறிகள், தடுப்பூசி போடுவதன் அவசியம், ஆக்சிஜன் அளவை அறிந்து கொள்ளும் கருவியின் அவசியம், ஆக்சிஜன் அளவு 90-க்கும் கீழ் குறைந்தால் உடனே அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும் என்பதுகுறித்து பொதுமக்களிடம் ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
ஆக்சிஜன் உற்பத்திக்கு முக்கியத்துவம்
மருத்துவமனைகளில் ஆக்சிஜன் இருப்பு குறையாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். தட்டுப்பாடு ஏற்பட்டால் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் டாக்டர்கள் மற்றும் செவிலியர்களை வேறு மருத்துவமனைக்கு மாற்றக்கூடாது. கொரோனா சிகிச்சை அளிக்க கூடுதலாக செவிலியர்களை நியமனம் செய்து கொள்ள வேண்டும்.
திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை, சின்னசேலம், சங்கராபுரம் ஆகிய அரசு மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கு படுக்கை வசதிகளை உடனடியாக தயார் படுத்த வேண்டும். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய முன்வருபவர்கள் யாரேனும் இருந்தால் அவர்களை ஊக்குவித்து முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
வாகன சோதனை
முன்னதாக கவுதமசிகாமணி எம்.பி. பேசும்போது உயிரிழப்பு ஏற்படாத வகையில் கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வசதியுடன் சிகிச்சை அளிக்க வேண்டும். ஊரடங்கு காலத்தில் தேவையின்றி வெளியே வருபவர்களின் வாகனங்களை நகரப் பகுதிக்குள் போலீசார் அனுமதிக்கக்கூடாது. அவ்வாறு வரும் வாகனங்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும். வாகன சோதனையை கடுமையாக வேண்டும் என்றார்.
உதயசூரியன் எம்.எல்.ஏ. பேசும்போது, கொரோனா தொற்று அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தடுப்பு கட்டைகள் அமைத்து தினமும் கிருமி நாசினி தெளிக்க வேண்டும். அப்போதுதான் மக்கள் கொரோனா பயத்துடன் வெளியில் வராமல் வீட்டிலேயே இருப்பார்கள் என்றார். மணிகண்ணன் எம்.எல்.ஏ.பேசும்போது, உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்டுள்ள டாக்டர்கள் மற்றும் செவிலியர்களை மீண்டும் அங்கேயே பணியமர்த்த வேண்டும். மேலும் மருத்துவமனைக்கு ஆக்சிஜன் வசதி செய்து தர வேண்டும் என்றார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் விஜய்பாபு, சப்-கலெக்டர் ஸ்ரீகாந்த், திருக்கோவிலூர் வருவாய் கோட்டாட்சியர் சாய்வர்தினி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் சுரேஷ், ஊரக வளர்ச்சித்துறை மாவட்ட திட்ட இயக்குனர் முருகண்ணன், அரசு மருத்துவ கல்லூரி டீன் உஷா, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் சண்முகக்கனி, சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் சதீஷ்குமார், நகராட்சி ஆணையர் குமரன், முன்னாள் ஒன்றியக் குழு துணை தலைவர் பி.கே.முரளி, மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் பாபு மற்றும் மருத்துவம், ஊரக வளர்ச்சி, வருவாய் உள்ளிட்ட அனைத்து துறையை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story