மாற்று இடத்தில் தடுப்பூசி போட பொதுமக்கள் கோரிக்கை


மாற்று இடத்தில் தடுப்பூசி போட பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 14 May 2021 10:50 PM IST (Updated: 14 May 2021 10:50 PM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா பரவும் அச்சம் எதிரொலியாக கொரோனா தடுப்பூசி போடுவதை வேறு இடத்திற்கு மாற்றி அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராமநாதபுரம், 
ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா பரவும் அச்சம் எதிரொலியாக கொரோனா தடுப்பூசி போடுவதை வேறு இடத்திற்கு மாற்றி அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தடுப்பூசி
 கொரோனா பரவலை தடுக்கும் வகையில் அரசு 2 வார காலத்திற்கு முழு ஊரடங்கு பிறப்பித்துள்ளது. கொரோனாவில் இருந்து தப்பித்து உயிரை தற்காத்துக்கொள்ள அரசு தடுப்பூசி போட அறிவுறுத்தி மக்களுக்கு தேவையான தடுப்பூசிகளை இருப்பு வைத்து வருகிறது. ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் கொரோனா தடுப்பூசி மையம் அமைக்கப்பட்டு 2 வகையான தடுப்பூசிகளும் இருப்பு வைக்கப்பட்டு பொதுமக்களின் விருப்பத்தின் அடிப்படையில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. 
இந்தநிலையில் தற்போது ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரித்து இளம் வயதினர் முதல் முதியவர்கள் வரை ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நாள் ஒன்றுக்கு 300 பேர் வரை பாதிக்கப்படும் வகையில் அரசின் புள்ளி விவரம் தெரிவிக்கிறது. இதன் காரணமாக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா வார்டில் தொற்றுக்கு உள்ளானவர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். 
ஆபத்து
இதுதவிர, நோய் அறிகுறி உள்ளவர்கள் சி.டி. ஸ்கேன் எடுக்கவும், கொரோனா பரிசோதனை செய்யவும் அதிகஅளவில் வந்து செல்கின்றனர். இவர்கள் பரிசோதனைக்காக காத்திருக்கும் வேளையில் சர்வ சாதாரணமாக ஆஸ்பத்திரியின் அனைத்து பகுதியிலும் சென்று உட்கார்ந்து நின்று பேசி வருகின்றனர்.
இவர்களில் நோய்த்தொற்று உறுதி செய்யப்படுபவர்கள் மூலம் ஆஸ்பத்திரியில் உள்ள மற்றவர்களுக்கும் தொற்று பரவும் ஆபத்து உள்ளது. இதுபோன்ற நிலையில் ஆஸ்பத்திரியில் கொரோனா தடுப்பூசி போட செல்வதற்கு சிலர் தயங்கி வருகின்றனர். அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றதால் நோய் தொற்று வந்துவிடும் என்று அச்சம் அடைந்துள்ளனர். இதனால் தடுப்பூசி போடுவதில் இதுநாள் வரை பலர் தயங்கி வருகின்றனர். 
ஏற்பாடு
பொதுமக்களின் அச்சத்தினை கருத்தில் கொண்டு கொரோனா தடுப்பூசி போடும் மையத்தினை அரசு ஆஸ்பத்திரி தவிர மருத்துவ சுகாதார துணை இயக்குனர் அலுவலகம் அல்லது அரசு பள்ளிக்கட்டிடம் போன்றவற்றில் மாற்று ஏற்பாடு செய்து ஊசி போட்டால் பலருக்கும் நம்பிக்கையுடன் ஊசி போட வழிவகுக்கும் நோய் பரவலை கட்டுப் ்படுத்த ஊசி போட விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் வேளையில் மக்களின் அச்சத்தை போக்க தடுப்பூசி மாற்று இடத்தில் போட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story